Published : 31 Aug 2014 12:05 PM
Last Updated : 31 Aug 2014 12:05 PM

மரம் வளர்ப்பு மக்கள் இயக்கமாக வேண்டும்: நடிகர் விவேக் விருப்பம்

“மரம் வளர்ப்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்” என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்தார்.

‘கிரீன் குளோப்’ மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் பாப்பாக்குடி ஒன்றியம், ஓடைமறிச்சான் ஊராட்சிக்கு உட்பட்ட உடையாம்புளி கிராமத்தை தத்து எடுத்து அக்கிராமத்தில், 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து, அக்கிராமத்தை பசுமை கிராமமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

பசுமை கிராம திட்டம்

இதற்காக உடையாம்புளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழா வில், இத்திட்டத்தை திரைப்பட நடிகர் விவேக், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் அறிவி யல் ஆலோசகர் வி. பொன்ராஜ் ஆகியோர் தொடக்கி வைத்தனர். நடிகர் விவேக் பேசியதாவது:

தமிழகத்தில் இதுவரை 24 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டங்களை தொடக்கி வைத்திருக் கிறேன். திருநெல்வேலி, தூத்துக் குடி மாவட்டங்களில் கிராம உதயம் அமைப்பு மூலம் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

வறட்சியான 2 கிராமங்களை தத்தெடுத்து, பசுமை கிராமத்தை உருவாக்கும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மரம் வளர்ப்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பணியை தொடர்ந்து செய்து வருகிறோம்.

மழை வளம் பெருக

மழை குறைந்து விவசாயம் செய்ய முடியாத சூழல் தற்போது அதிகரித்து வருகிறது. அதற்கு விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறுவதை தடுக்க வேண்டும். விளை நிலங்களை பாதுகாக்க மழை வளம் வேண்டும். அப்துல்கலாம் அறிவுரையின்படி தமிழகம் முழுவதும் மக்களிடையே மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறேன் என்றார்.

வி. பொன்ராஜ் பேசும்போது, “வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தால் நம் நாடு பசுமை நாடாக மாறும். மரம் நடுவதன் அவசியத்தை மக்கள் அறிய வேண்டும். மரம் வளர்ப்பதால் மழை வளம் கிடைக்கும். விவசாயம் செழிக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்” என்றார் அவர்.

மழையிலும் மரம் வழங்கல்

விழா நடைபெற்றபோது மழை பெய்தது. மழையை பொருட்படு த்தாமல் மக்கள் கலந்து கொண்டனர். நடிகர் விவேக் கொட்டும் மழையில் பெண்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி உற்சாகப்படுத்தினார்.

கிராம உதயம் இயக்குநர் வே. சுந்தரேசன், ஊராட்சித் தலைவர் எல். சந்தானமுத்து, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் அர்ச்சுனன், ஊராட்சித் துணைத் தலைவர் முருகன், கிராம உதயம் அறங்காவலர் பழனி, ஆலோசனைக்குழு உறுப்பினர் முருகன், வழக்கறிஞர் சு.பகத்சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x