பாலியல் கொடுமைக்கு எதிரான கமிட்டி மாதந்தோறும் கருத்து கேட்க வேண்டும்: அண்ணா பல்கலை. அறிவிப்பு
சென்னை: வளாகத்துக்குள் நடைபெறும் வகுப்பு மற்றும் விடுதி நேரங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வெளியாகி சர்ச்சையானதால் அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது வெளியாட்கள் எளிதில் செல்ல முடியாதபடி சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும், தொடர் நடவடிக்கைகளுக்காக பல்வேறு கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை பதிவாளர் ஜே.பிரகாஷ் சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு: அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் சைக்கிள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வகுப்பு மற்றும் விடுதி நேரங்களில் எந்த மாற்றமும் இல்லை. கட்டுமான தொழிலாளர்கள் எந்த சூழலிலும் வேலை நேரத்துக்கு பின்பு பல்கலை. வளாகத்தில் இருக்கக்கூடாது. வெளிநபர்கள் நடை பயிற்சி செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாவலர்கள் மாலை, இரவு நேரத்தில் ரோந்து செல்ல வேண்டும். அங்கீகரிக்கப்படாத வாகனங்கள் நிறுத்தப்பட்டால் போலீசில் புகார் அளிக்கப்படும். ஆன்லைன் நிறுவன டெலிவரி ஊழியர்களுக்கு பல்கலைக்கழக நுழைவு வாயில் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மாணவர்கள் எப்போதும் அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும். பல்கலைக்கழக வளாகம் முழுவதும் சிசிடிவி கேமரா, மின்விளக்குகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கமிட்டி ஒவ்வொரு மாதமும் கூடி மாணவர்களிடம் கருத்துகளை கேட்டறிய வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பிற்காக காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு அனைத்து மாணவிகளுக்கும் பேராசிரியர்களுக்கும் கூறவேண்டும். கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்.
வாகனத்தில் வருபவர்களின் வாகன எண் செல்போன்கள் எண்கள் ஆகியவற்றையும் பதிவேட்டில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இதை பல்கலைக்கழக பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
