சென்னை கோட்​டத்​துக்கான ஏசி மின்சார ரயில்: ஐ.சி.எஃப்-ல் தயாரிப்பு பணி தொடங்​கியது

சென்னை கோட்​டத்​துக்கான ஏசி மின்சார ரயில்: ஐ.சி.எஃப்-ல் தயாரிப்பு பணி தொடங்​கியது
Updated on
1 min read

சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்துக்கான குளிர்சாதன வசதி கொண்ட ஏசி மின்சார ரயில் தயாரிக்கும் பணி ஐசிஎஃப் ஆலையில் தொடங்கியுள்ளது.

உலகப்புகழ் பெற்ற ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையான சென்னை ஐசிஎஃப் ஆலையில் வந்தே பாரத் ரயில்கள், எல்.எச்.பி. என்னும் நவீன பெட்டிகள், ஏசி மின்சார ரயில் பெட்டிகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்துக்கு 2 ஏசி மின்சார ரயில்கள் தயாரித்து வழங்கவும் திட்டமிடப்பட்டது.

இப்பணி கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால், இந்த ரயில் தயாரிப்பு பணி தாமதமானது. இந்நிலையில், ஐசிஎஃப் ஆலையில் மின்சார ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி தொடங்கியுள்ளது. இந்த ரயில் கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து ஐசிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது: சென்னை ஐசிஎஃப் ஆலையில் 12 பெட்டிகள் கொண்ட புது வகை ஏசி மின்சார ரயில் கடந்த 2018-ம் ஆண்டுமுதல் தயாரிக்கப்படுகின்றன. மும்பை உள்ளிட்ட இடங்களில் தற்போது ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. தானியங்கி கதவுகள், ஜி.பி.எஸ். அடிப்படையிலான தகவல்மற்றும் அறிவிப்பு வசதி இதில் உள்ளது. அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் இருக்கும்.

சென்னைக்கு 2 ஏசி மின்சார ரயில் தயாரிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. தற்போது, இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முதல் ரயில் அடுத்த 2 மாதங்களில் தயாரித்து வழங்கப்படும். 2-வது ரயில் வரும் மார்ச் அல்லது ஏப்ரலில் தயாரித்து வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் விரைவுப் பாதையில் ஏ.சி. மின்சார ரயில் இயக்க ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே கடந்த 2019-ம் ஆண்டு பரிந்துரை செய்தது. இத்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் ஏ.சி. ரயில் இயக்கத்தின் தேவை, அதிக மக்கள் பயணிக்கும் ரயில் நிலையங்களின் பட்டியலையும் அனுப்பியது.

இதையடுத்து, ஏசி மின்சார ரயில்களை தயாரித்து வழங்க ஐசிஎஃப்-க்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் தற்போது ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி தொடங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in