

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அங்கு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் நேற்று காலை வந்துள்ளது. பல்கலைக் கழக நிர்வாகம் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த கோட்டூர்புரம் போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் பல்கலைக் கழகம் வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
பல மணி நேர சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு ஏதும் கிடைக்காதல், அந்த மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்பி, பதற்றத்தை ஏற்படுத்திய நபரைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அண்ணா பல்கலை. வளாகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.