

வேலூர்: காட்பாடியில் அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் இரண்டாவது நாளாக நேற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதற்கிடையில், கல்லூரியில் இருந்து பெரும் தொகையை வங்கி அதிகாரிகள் உதவியுடன் வேனில் எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அங்குள்ள கணினி ஒன்றில் மென்பொருள் கோளாறு ஏற்பட்டதால் சோதனை பணிகள் தாமதமாகின.
அமைச்சர் துரைமுருகன் வீடு, கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை சோதனையை தொடங்கினர்.இதில், பூஞ்சோலை சீனிவாசன் தொடர்புடைய இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சில ஆவணங்கள் மற்றும் ரூ.28 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதேநேரம், கிங்ஸ்டன் கல்லூரியில் மட்டும் நேற்று இரண்டாவது நாளாக சோதனை தொடர்ந்தது.
வீட்டில் இருந்த ரூ.8 லட்சம்: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் வீட்டில் பல்வேறு பகுதிகளில் ரூ.8 லட்சம் பணம் இருந்தது. துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி, கதிர்ஆனந்த் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் வருமானவரி கணக்கை தாக்கல் செய்து வருவதுடன் ஒரு நபர் ரூ.2 லட்சம் அளவுக்குக் கையிருப்பு தொகையாக வைத்திருக்கலாம் என்பதால் அந்த பணத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றவில்லை.
சோதனையின்போது அமைச்சரின் அறை மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரியின் அறை மட்டும் பூட்டியிருந்தது. அதன் மாற்றுச் சாவி இல்லாத நிலையில் இரண்டு அறைகளைச் சோதனை செய்தே தீர வேண்டும் என அதிகாரிகள் பிடிவாதம் காட்டினர். பின்னர், அறையின் கதவை உடைத்தாவது திறக்க வேண்டும் என அதிகாரிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர். இதையடுத்து பூட்டுகள் உடைக்கப்பட்டு இரண்டு அறைகளில் சோதனை நடத்தி முடிக்கப்பட்டது.
கல்லூரியில் நடந்த சோதனையில் அங்கிருந்த பணத்தை வங்கி அதிகாரிகள் உதவியுடன் சரி பார்த்தனர். இதையடுத்து வெள்ளை வேனில் அப்பணம் எடுத்து செல்லப்பட்டு அமலாக்கத் துறையின் கணக்கில் வரவு வைத்துள்ளனர். அந்த பணத்துக்கு கல்லூரி நிர்வாகம் தரப்பில் கணக்குகாட்டிவிட்டு திரும்பப் பெறலாம் என்பதால் அந்த பணம் குறித்த விவரம் வெளியிடவில்லை. மேலும் கல்லூரியில் உள்ள ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். கல்லூரியில் இருந்து பெரும்தொகையை வேனில் எடுத்து சென்றிருப்பதாகவே கூறப்படுகிறது. மேலும், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி நிர்வாக கணினிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், ஒரு கணினியின் மென்பொருள் கோளாறால் சோதனையில் தாமதமானது.