

மதுரை: பிராமணர்கள் பாதுகாப்பு சட்டம் கோரி மதுரையில் இந்து மக்கள் கட்சி சார்பில் நாளை (ஜன.5) உண்ணாவிரத போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலைக் கண்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “பிராமணர் சமுதாயத்துக்கு எதிராக நடக்கும் அநீதிகளை கண்டித்தும், பிராமணர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றக் கோரியும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நாளை ( ஜன.5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மதுரை பழங்காநத்தம் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறுகிறது.
இதில் பிராமண சமூகத்தினர், ஆதிசைவ சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரிகள், குருக்கள் அனைத்து சமுதாய தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி வழங்க கோரி மதுரை மாநகர காவல் துறையிடம் விண்ணப்பித்தோம் இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே, மதுரை பழங்காநத்தத்தில் உண்ணாவிரத போராட்டதுக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது
இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், “போராட்டம் நடத்த தேர்வு செய்துள்ள இடம் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதி. மேலும் இதுபோன்று சென்னையில் நடந்த கூட்டத்தில் பிற சமூகத்தினரை அவதூறாக பேசி, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. ஆகையால் தான் அனுமதி வழங்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி, கூட்டத்தில் யார்? யார்? கலந்து கொள்கிறார்கள்? அதில் முக்கிய பிரமுகர்கள் யார்? பேச்சாளர்கள் யார்? என்ற எந்த விபரமும் இல்லை. அது குறித்து மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இறையாண்மைக்கு எதிராகவோ, பிற சமூகத்துக்கு எதிராகவோ பேச மாட்டோம் என உத்தரவாதம் அளித்தால் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார். இதையடுத்து உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் 300 முதல் 500 நபர்கள் கலந்து கொள்வார்கள் என்றும், உண்ணாவிரத போராட்டத்தின் போது, பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடையூறையும் ஏற்படுத்த மாட்டோம். உண்ணாவிரத போராட்டத்தின் போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொள்ளுவோம். எங்களின் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் மட்டுமே பேசப்படும். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் தொடக்கத்தில் இருந்து நிகழ்ச்சி முடியும் வரை அதை கடைப்பிடிப்போம்.” எனக் கூறப்பட்டு இருந்தது.
இதனை பதிவு செய்த நீதிபதி உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி மனுதாரர்கள் நிகழ்ச்சி நடத்த வேண்டும். இதற்கு போலீஸார் அனுமதி வழங்கி, போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.