சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 203 மயானங்களில் தீவிர தூய்மை பணி

சென்னை மாநகராட்சி மண்டலங்களில் உள்ள 203 மயானங்களில் நேற்று தீவிர தூய்மைப் பணி நடைபெற்றது. இதையொட்டி, மயிலாப்பூர் மயானத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள். | படம்: ம.பிரபு |
சென்னை மாநகராட்சி மண்டலங்களில் உள்ள 203 மயானங்களில் நேற்று தீவிர தூய்மைப் பணி நடைபெற்றது. இதையொட்டி, மயிலாப்பூர் மயானத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள். | படம்: ம.பிரபு |
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சியின் 203 மயானங்களில் தீவிர தூய்மைப் பணி நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 159 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தீவிர தூய்மைப் பணியின்கீழ் குப்பைகள், கட்டிடக் கழிவுகள், சாலையோரம் மற்றும் சாலை மையத் தடுப்புகளில் உள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றுதல், நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள், பூங்காக்களில் தூய்மைப் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் 2 கட்டங்களாக ஆக.21, டிச.30 ஆகிய நாட்களில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நேற்று 203 மயானங்களில் காலை 6 முதல் 8 மணி வரை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில், அனைத்து சுடுகாடு மற்றும் இடுகாடுகளில் உள்ள குப்பைகள், கட்டிடக் கழிவுகளை அகற்றுதல், சுவரொட்டிகள், அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் மற்றும் பலகைகள், புதர் செடிகளை அகற்றுதல், இதர தேவையற்ற பொருட்களை அகற்றி சுத்தம் செய்தல் போன்ற பணிகள் நடைபெற்றன. அந்த வகையில், 93.38 டன் குப்பைகள், 65.78 டன் கட்டிடக் கழிவுகள், என மொத்தம் 159.16 டன் குப்பைக் கழிவுகள் மற்றும் 666 சுவரொட்டிகள், பேனர்கள் அகற்றப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in