கோப்புப் படம்
கோப்புப் படம்

ஸ்கரப் டைபஸ் தொற்றால் தமிழகத்தில் 5,000 பேர் பாதிப்பு

Published on

தமிழகத்தில் பரவி வரும் ஸ்கரப் டைபஸ் தொற்றால் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 10 முதல் 20 பேர் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் ஸ்கரப் டைபஸ் தொற்று பரவி வருகிறது. அதேபோல, கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பாதிப்புகள் காணப்படுகின்றன.

ஸ்கரப் டைபஸ் என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்றாகும். ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது அவர்களுக்கு ஸ்கரப் டைபஸ் நோய் ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள் அதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. இந்த ஸ்கரப் டைபஸ் தொற்றால் 2024-ம் ஆண்டு முதல் தற்போது வரை 5,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 10 முதல் 20 பேர் தொற்று பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருகின்றனர்.

இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “விவசாயிகள், புதர்மண்டிய மற்றும் வனப் பகுதிகளுக்கு அருகே வசிப்பவர்கள், மலையேற்றத்தில் ஈடுபடுவோர், கர்ப்பிணிகள் மற்றும் பூச்சிக் கடிக்குள்ளாகும் நபர்களுக்கு ஸ்கரப் டைபஸ் தொற்று பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. எலிசா ரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு பரிசோதனைகள் மூலமாக இந்த நோயைக் கண்டறிய முடியும். ஸ்கரப் டைபஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின் போன்ற ஆன்ட்டி-பயாடிக் மருந்துகளை அளித்து சிகிச்சை அளிக்கலாம்.

அதன் பிறகும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றாலோ அல்லது இதயம், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்து பாதிப்புகள் ஏற்பட்டாலோ, ரத்த நாளத்தின் வழியே திரவ மருந்துகளை செலுத்தி உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் உயர் சிகிச்சை மையங்களில் நோயாளிகளை அனுமதிக்க வேண்டும். பூச்சிகள் ஏதேனும் கடித்தாலும் அலட்சியம் காட்டாமல் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். ஸ்கரப் டைபஸ் தொற்று சிகிச்சை தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களும் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன” என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in