ஜன.16-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்!

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
Updated on
2 min read

மதுரை: கடந்த ஆண்டை விட பிரம்மாண்ட பரிசு மழையுடன் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுப்போட்டிகள் வரும் ஜன.16 மற்றும் 15-ம் தேதிகள் நடக்கிறது. துணை முதல்வர் உதயநிதி, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முதல் தொடர்ந்து 3 மாதத்துக்கும் மேலாக 300-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலேமடு, அனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் புகழ்பெற்றவை. குறிப்பாக அலங்காநல்லூர் போட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகளின் உச்சமாக பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும்.

இந்த போட்டியில் பங்கேற்பதையே காளை உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் பெருமையாக கருதுவார்கள். உள்ளூர் பார்வையாளர்கள் முதல் உலக சுற்றுலாப் பயணிகள் வரை, இந்த போட்டியை காண மதுரையில் திரள்வார்கள். இந்த போட்டியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அல்லது துணை முதல்வர் உதயநிதி ஆகியோரில் ஒருவர் தொடங்கி வைக்க உள்ளார்கள்.

முதல் பரிசு பெறும் காளை, மாடுபிடி வீரர்களுக்கு கார், இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்படும். பங்கேற்கும் ஒவ்வொரு காளைக்கும் தங்க காசு, மாடுகளை அடக்கும் ஒவ்வொரு வீரருக்கும் தங்க காசு மற்றும் விலை உயர்ந்த பல்வேறு பரிசுகள் வழங்கப்படும். அதனால், இந்த போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் எதிர்பார்பை கூட்டி வருகிறது.

இந்நிலையில், உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையாக வரும் ஜனவரி 16 மற்றும் 15-ம் தேதிக்களில் நடக்கிறது. இந்த இரு போட்டிகளுக்கான வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடம், மாடுகள் சேகரிக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான முகூர்த்த கால் நடும் விழா, இரு போட்டிகள் நடக்கும் இடத்தில் உள்ள வாடிவாசல்கள் முன் நடைபெற்றது.

அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு முகூர்த்த கால் நட்டு பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கே.அரவிந்த், உதவி ஆட்சியர் வைஷ்ணவி, எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் ஜல்லிக்கட்டு நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்க உள்ளார். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரம்மாண்டவும், சிறப்பாகவும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பரிசுப் பொருட்கள் கடந்த ஆண்டைப்போல் இன்னும் பிரம்மாண்டமாக வழங்கப்பட உள்ளது.

பரிசுப் பொருட்கள் அனைத்தும் அரசு சார்பில் வழங்கப்படாது. நன்கொடையாளர்கள் மூலம் பெற்று வழங்கப்படும். இரு போட்டிகளிலும் 800 முதல் 900 காளைகள் களம் இறக்கப்படும். ஆன்லைன் முறையில் காளைகளும், மாடுபிடி வீரர்களும் பதிவு செய்து உடல் தகுதி அடிப்படையி்ல் பங்கேற்க அனுமதி வழங்கப்படும்,'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in