

புதுச்சேரி: “மதுரையில் பாஜக மகளிர் அணியினரை கைது செய்தது தொடர்பாக நாளை (ஜன.4) தமிழக ஆளுநரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்,” என்று அகில இந்திய பாஜக மகளிர் அணி தலைவியும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
பாஜக நிர்வாக அமைப்பு தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த புதுச்சேரிக்கு வந்த அவர் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் ஒரு மாணவிக்கு கொடுமை நிகழ்ந்திருக்கிறது. அதற்குப் பின்னர் ஒருவர் கைது செய்யப்படுகிறார்.அவர் ஆளும் கட்சிக்கு மிக நெருக்கமாக இருக்கிறார். பொறுப்பில் இருக்கும் நபராகவும் உள்ளார். பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நபராகவும் அவர் உள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் இன்னொரு நபரை பற்றி பேசி உள்ளார். நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. குஷ்பு தலைமையில் நடந்த இந்த பேரணியில் கலந்துகொண்ட பாஜக மகளிர் அணியினரை கைது செய்ததை கண்டித்து நாளை (ஜன.4) ஆளுநரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக அரசு இருக்க வேண்டும். அவரது புகார் பொது வெளியில் வந்தால் யார் புகார் தரவருவார்கள் என்ற கேள்வி எழுகிறது.
உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து இவ்வழக்கை எடுத்ததன் மூலம் நியாயமான விசாரணை நடக்கவில்லை என நிரூபணமாகிறது. இது மாநில அரசுக்கு அவமானம். காவல்துறை , தமிழக அரசின் மீது நம்பிக்கை இல்லாததையே இது காட்டுகிறது. தமிழக அமைச்சர் ரகுபதி இவ்விஷயத்தில் புரிந்து பேசுகிறாரா? என்று தெரியவில்லை.
பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமை எங்கு நிகழ்ந்தாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மணிப்பூரில் நியாயமான விசாரணை நடக்கிறது. நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டுள்ளனர். தண்டனை கிடைக்க மணிப்பூர் மாநில அரசு நடவடிக்கை எடுக்கிறது.ஆனால் தமிழகத்தில் அதுபோல் இல்லை. எப்ஐஆர் வெளியே வந்துள்ளது.
நாட்டில் எங்கு பெண்களுக்கு பாதிப்பு நிகழ்ந்தாலும் பாஜக ஆதரவாக இருக்கிறது. சட்டரீதியான பாதுகாப்பு தருகிறது. பாஜக ஆட்சி புரியும் மாநிலத்தில் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறார்கள். தமிழக அரசு பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிரான செயல்பாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். புதுச்சேரி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கை விரைவுப்படுத்த உள்துறை அமைச்சரிடம் கூறுவேன். பெண்கள் தொடர்பான வழக்குகளை அரசு, சமூகம், மீடியா பொறுப்புணர்வோடு அணுகவேண்டும். சமூக வலைதளங்களில் பெண்களை யார் விமர்சித்தாலும் தவறுதான்.
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை வழக்கமான நடவடிக்கைதான். அவர்கள் ஆதாரத்தை வைத்துதான் சோதனையிடுவார்கள். புதுச்சேரியில் பாஜக மாநிலத்தலைவர் மாற்றம் குறித்து நிர்வாகிகள் ஏதும் சொன்னார்களா? என்பது பற்றி தற்போது சொல்ல இயலாது. தமிழகத்தில் மாநிலத்தலைவர் அண்ணாமலை சிறப்பாக செயல்படுகிறார்.” என்று அவர் கூறினார்.