Published : 10 Aug 2014 01:52 PM
Last Updated : 10 Aug 2014 01:52 PM

உயிருக்கு போராடிய என்எல்சி ஊழியர்: ஆம்புலன்ஸ் டிரைவர் அலட்சியத்தால் உயிரிழந்தார்

நெய்வேலி வட்டம் 12 பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் (50). இவர், என்எல்சி மின்னியல் பராமரிப்புப் பிரிவில் ஊழியராக பணியாற்றி வந்தார். வெள்ளிக்கிழமை இரவு நெய்வேலி டவுன்ஷிப்பில் இருந்து ஆர்ச்கேட் நோக்கி பைக்கில் சென்றுள்ளார். அப்போது, இவர் ஓட்டி வந்த பைக் மீது எதிரே வந்த கார் மோதியது. உடனே, அந்த வழியே சென்றவர்கள் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நெய்வேலி டவுன்ஷிப் சிறப்பு உதவி ஆய்வாளர் இளவரசன் உள்ளிட்ட போலீஸார் விரைந்து வந்து என்எல்சி மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர்.

அப்போது அந்த வழியே என்எல்சி மருத்துவமனையை சேர்ந்த ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. உடனே, அதை நிறுத்தி, சாலையில் காயங்களுடன் மயங்கிக் கிடந்த லாரன்ஸை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநரோ, ‘விபத்தில் சிக்கியவர் இறந்து விட்டதுபோல தெரிகிறது. இறந்தவர் உடலை ஆம்புலன்சில் ஏற்ற முடியாது’ என கூறியுள்ளார்.

இதனால், தனியார் ஆம்புலன்ஸை போலீஸார் வரவழைத்தனர். அதற்குள் லாரன்ஸ் இறந்துவிட்டார்.

இது குறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் இளவரசன் கூறும்போது, “விபத்தில் சிக்கியவர் என்எல்சி ஊழியர் என்று தெரிந்தும் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையிலேயே அவரை பரிசோதிக்காமல் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வந்துவிட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் செயல் அநாகரீகமானது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x