ஆட்சி அதிகாரத்தில் நிச்சயம் பங்கு கேட்க மாட்டோம்: துரை வைகோ உறுதி

ஆட்சி அதிகாரத்தில் நிச்சயம் பங்கு கேட்க மாட்டோம்: துரை வைகோ உறுதி
Updated on
1 min read

ஆட்சியில் பங்கு கேட்டு குழப்பம் விளைவிக்க விரும்பவில்லை என்று மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ கூறினார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று இரவு கூறியதாவது: மக்கள் கோரிக்கைகளை அரசிடம் எடுத்துச் செல்லும்போது, அமைச்சர்களும், அதிகாரிகளும் அவற்றை நிறைவேற்றிக் கொடுக்கிறார்கள். இதற்காகவும், மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்றி விடக்கூடாது என்பதற்காகவும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து, குழப்பத்தை விளைவிக்க விரும்பவில்லை.

பூரண மதுவிலக்கு கொள்கையில் மதிமுக உறுதியாக இருக்கிறது. இதர போதைப் பொருட்களின் புழக்கத்தை மத்திய அரசின் துறைகள்தான் கட்டுப்படுத்த வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 வழகுமாறு மதிமுக சார்பிலும் கேட்டிருக்கிறோம். தக்க அறிவிப்பு வெளியாகும் என்று என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெறுவதாக எழும் குற்றச்சாட்டுகள் தவறானவை. அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகள் பங்களிப்புடன் தரம் உயர்த்தும் திட்டம்தான் அது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

பள்ளிக்கல்வித் துறைக்கு ஆண்டுக்கு ரூ.44 ஆயிரம் கோடியை அரசு ஒதுக்குகிறது. அதேநேரத்தில், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி பள்ளிக்கல்வித் துறைக்கு கடன் வாங்குகிறார்கள். இந்த பணம் எங்கே செல்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வியெ எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது, பள்ளிகளை நிர்வகிப்பது ஆகிய செலவுகள் கல்வித் துறைக்கு ஏற்படுவது அண்ணாமலைக்கு தெரியாதா?

திருச்சி பன்னாட்டு விமானநிலையத்தில் ஓடுதள விரிவாக்கப் பணிகள் 97 சதவீதம் முடிந்து விட்டன. இன்னும் 6 மாதத்தில் விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்து, ஓடுதளம் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு எந்த அருகதையும், தகுதியும் கிடையாது. இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகமாக நடக்கும் மாநிலம் பாஜக ஆளும் உத்தர பிரதேசம். அதேபோல, மத்திய அரசின் காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள தலைநகர் டெல்லியில் மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in