

புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிவாரணம் கொடுத்ததால் ரூ. 177 கோடி செலவாகி கடும் நிதி நெருக்கடியில் உள்ளது புதுச்சேரி. இந்நிலையில், மத்திய அரசின் நிவாரணம் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பஸ் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதைத்தொடர்ந்து மதுபான உரிமக்கட்டணமும் உயர்கிறது. டூவீலர், கார் பதிவு கட்டணமும் அதிகரிக்கவுள்ளது.
ஃபெஞ்சல் புயல், அணைகள் திறப்பால் கிராமப்பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம் ஆகியவற்றால் புதுச்சேரி மக்கள் இம்முறை கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அதையடுத்து முதல்வர் ரங்கசாமி நிவாரணங்களை அறிவித்தார். முதல் கட்டமாக 3.54 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை தரப்பட்டது. இதனால் ரூ. 177 கோடி அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது.
மேலும் மத்திய குழுவினர் புதுச்சேரி வந்து ஆய்வு செய்து சென்றனர். மத்திய அரசிடம் ரூ. 614 கோடி கோரி கடிதமும் முதல்வர் ரங்கசாமி தந்துள்ளார். தமிழகத்துக்கு உதவி கிடைத்துள்ள சூழலில் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணியிலுள்ள புதுச்சேரிக்கு இதுவரை உதவி கிடைக்கவில்லை என்ற பேச்சு மக்களிடம் எழுந்துள்ளது.
அதைத்தொடர்ந்து புதுச்சேரி அரசு வரி, கட்டண உயர்வை கையில் எடுத்துள்ளது. கடும் நிதி சுமையை சமாளிக்க அடுத்தடுத்து கட்டணங்களை புதுச்சேரியில் உயர்த்த வேண்டியுள்ளது. புதுச்சேரியில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்ந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதற்குள் அடுத்த அறிவிப்பாக புத்தாண்டு முதல் பெட்ரோல் டீசல் கட்டணம் லிட்டருக்கு தலா ரூ. 2 உயர்ந்தது.
இது தொடர்பாக அரசு தரப்பில் விசாரித்தபோது, “புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வேறுபாட்டின் காரணமாக வரி உயர்த்தி வருவாய் திரட்ட முடிவு எடுத்தோம். வருவாய் திரட்டுவதற்கு அதிக இடம் இருப்பதாக நாங்கள் உணர்ந்தோம். வரி திருத்தத்திற்குப் பிறகும், புதுச்சேரியில் எரிபொருள் விலைகள் மிகவும் மலிவாக இருக்கும். எடுத்துக்காட்டாக, வாட் வரியை உயர்த்திய பிறகு, அண்டை மாநிலங்களான தமிழகம்,கேரளம், ஆந்திரத்தை ஒப்பிடுகையில், புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே ரூ.6.54 மற்றும் ரூ.7.91 குறைவாகதான் இருக்கும்.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை மாற்றியமைத்தப் பிறகு, இதே அளவு எரிபொருள் விற்பனை தொடர்ந்தால், மாதந்தோறும் சுமார் 15 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என அரசு எதிர்பார்க்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி மூலம் மாத வருமானம் ரூ.60 கோடி முதல் ரூ.65 கோடியாகவுள்ளது.” என்றனர்.
இதையடுத்து அடுத்து என்னென்ன உயர போகிறது என அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "மதுபான உரிம கட்டணத்தை உயர்த்தும் திட்டம் அரசுக்கு உள்ளது. வருவாய் அதிகரிப்பின் ஒரு பகுதியாக மதுபான விற்பனை நிலையங்களுக்கான கலால் வரி மற்றும் உரிமக் கட்டணத்தை உயர்த்துவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. அனைத்து வகை விற்பனை நிலையங்களின் உரிமக் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் இந்த நிதியாண்டில் அரசுக்கு ரூ.55 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட முடியும்.
அதேபோல் டூவீலர்கள், கார்கள், பஸ்கள், வாகனங்கள் பதிவு கட்டணத்தையும் உயர்த்தும் கோப்பு அனுமதிக்காக அரசுக்கு வந்துள்ளது. டூவீலருக்கு 1 சதவீத வரியை நான்கு சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். அதேபோல் கார்களுக்கு விலைக்கு ஏற்ப 4 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உள்ளதை 8 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டோம். தற்போது செயல்படுத்தும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த இது அவசியமாகிறது. கூடுதல் நிதி அதிகரிக்கும் ஆதாரங்களை கண்டறிவதும் அவசியமாகிறது.” என்கின்றனர்.