ஓசூர்: ஓராண்டுக்கும் மேலாக பொது மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது

ஓசூர்: ஓராண்டுக்கும் மேலாக பொது மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது
Updated on
1 min read

ஓசூர்: கிருஷ்ணகிரியில் ஓராண்டுக்கும் மேலாக பொது மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் யானைகள், சிறுத்தை, புலிகள் மற்றும் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளது. இந்நிலையில் கடந்த 12 மாதங்களுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட அடவிசாமிபுரம் அடுத்துள்ள சனத்குமார் ஆற்றின் கரையோர பகுதியில் சிறுத்தை ஒன்று பாறை இடுக்குகளில் மறைந்து கொண்டு அப்பகுதியில் அடிக்கடி ஆடுகள் மற்றும் நாய்களை அடித்து இழுத்து சென்றது.

இதே பகுதியில் சிறுத்தை தொடர்ந்து முகாமிட்டிருந்ததால், குட்டிகளுடன் சிறுத்தை இருக்க வாய்ப்புள்ளாக கருதி வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைத்தனர். கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்து வந்தனர். ஆனால் சிறுத்தை கூண்டில் சிக்காத நிலையில், அங்கிருந்து இடம் பெயர்ந்து வழிமாறி கடந்த சில மாதமாக தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே சந்திராபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

அப்போது வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க முயன்றனர். ஆனால் சிறுத்தை கிணற்றிலிருந்து தப்பித்து வெளியேறி வனப்பகுதிகளுக்குள் சென்றது. இதனையடுத்து பேரிகை அடுத்த புலியரசி கிராமத்தையொட்டி உள்ள செட்டிப்பள்ளி காப்புகாட்டிற்கு இடம்பெயர்ந்தது. அங்கு வனத்துறையினர் மரத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்து வந்தனர்.

கடந்த ஓராண்டாக வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்காமல் பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, கடந்தசில தினங்களாக மீண்டும் அடவிசாமிபுரம் பொன்னாங்கூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது.

வன உயிரின பாதுகாவலர் பகான் ஜெகதீஸ் சுதாகர் உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் விஜயன் தலைமையில் வனத்துறையினர் ஏற்கெனவே வைத்திருந்த கூண்டில் இறைச்சி வைத்து கண்காணித்து வந்த நிலையில் நேற்று இரவு இறைச்சி சாப்பிட கூண்டிற்குள் வந்த போது சுமார் 8 வயது சிறுத்தை சிக்கியது. இதனை அறிந்த சுற்றி உள்ள கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தையை எங்கு விட வேண்டும் என வனத்துறையினர் ஆலோசனை செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in