புத்​தாண்டு கொண்​டாட்டம்: சென்னை​யில் விபத்​தில் 2 பேர் உயிரிழப்பு - 242 பேரை எச்சரித்து அனுப்பிய போலீ​ஸார்

புத்​தாண்டு கொண்​டாட்டம்: சென்னை​யில் விபத்​தில் 2 பேர் உயிரிழப்பு - 242 பேரை எச்சரித்து அனுப்பிய போலீ​ஸார்
Updated on
1 min read

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் நிகழ்ந்த விபத்துகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆங்கிலப் புத்தாண்டை (2025) வரவேற்கும் வகையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். புத்தாண்டை பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாடும் வகையில் சென்னையில் 19 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு உதவியாக 1,500 ஊர்க்காவல் படையினரும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

விபத்து மற்றும் விபத்து உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் 425 இடங்களில் வாகனத் தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. பைக் ரேஸை தடுக்க 30 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. 100-க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள், பொது இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

அதுமட்டும் அல்லாமல் மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடலில் இறங்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. போலீஸாரின் பாதுகாப்பு, கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து மெரினாவில் சென்னை காவல் ஆணையர் அருண் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரில் ஆய்வு நடத்தினார். சென்னையில் அமைதியான முறையில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்று முடிந்தது.

2 விபத்துகள், 2 பேர் உயிரிழப்பு: வடபழனியைச் சேர்ந்தவர் சாருகேஷ் (19). பூந்தமல்லியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு கிழக்கு கடற்கரை சாலையில் நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து நேற்று அதிகாலை மீண்டும் பைக்கில் சாலிகிராமத்தைச் சேர்ந்த நண்பர் சஞ்சய் (19) வீட்டுக்கு புறப்பட்டார்.

நீலாங்கரை அடுத்த வெட்டுவாங்கேணி அருகே வரும்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது பைக் மோதியது. இதில், சாருகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால், அமர்ந்திருந்த நண்பர் படுகாயம் அடைந்தார். அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

இதேபோல், சேத்துப்பட்டு கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை வழியாக மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற வடமாநிலத்தை சேர்ந்த தீபக் என்ற இளைஞரும் சாலைத் தடுப்பில் மோதி உயிரிழந்துள்ளார். பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

போலீஸ் எச்சரிக்கை: புத்தாண்டையொட்டி அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கியவர்கள், வாகனப் பந்தயத்தில் ஈடுபட்டவர்கள், விதிகளை மீறி வாகனங்களை ஓட்டியவர்கள், வீலிங் செய்தவர்கள் என மொத்தம் 242 பேர் போக்குவரத்து போலீஸாரிடம் பிடிபட்டனர். அவர்களில் பலர் மாணவர்கள். வருடத்தின் முதல் நாள் என்பதால் அவர்கள் மீது வழக்கு பதியாமல், சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்களை வரவழைத்து எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in