

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் ஜனவரி 7-ம் தேதி நடைபெறும் என்று இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 30-ம் தேதி இரவு ஏவப்பட்ட பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் கூறியதாவது:
இது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்படும் 99-வது ராக்கெட் ஏவுதல். ஜனவரியில் 100-வது ராக்கெட்டை செலுத்துவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தொடர்ந்து 2025-ம் ஆண்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். தற்போது ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.
திட்டமிட்டபடி விண்கலன்கள் துல்லியமான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இனிவரும் நாட்களில் 2 விண்கலன்களின் தொலைவும் படிப்படியாக 20 கி.மீ வரை அதிகரித்து, பின்னர் அவற்றை அருகருகே கொண்டு சென்று ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெறும். அதன்படி, விண்கலன்கள் ஒருங்கிணைப்பு ஜனவரி 7-ம் தேதி நிகழ்த்தப்பட இருக்கிறது.
இந்தியாவில் கடந்த 1986-ம் ஆண்டிலேயே ‘ஸ்பேஸ் டாக்கிங்’ தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், அப்போது அதற்கான தேவை இல்லை. மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது போன்ற திட்டங்களை செயல்படுத்தவே இந்த தொழில்நுட்பம் தேவைப்படும். தற்போது, அதுதொடர்பான ஆராய்ச்சிகளில் நாம் ஈடுபட்டுள்ளதால், இப்போது அந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதி பாகமான பிஎஸ்-4 இயந்திரத்தின் ‘போயம்’ பகுதியில் மொத்தம் 24 ஆய்வுக் கருவிகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று ‘ரோபோட்டிக் ஆர்ம்’ (Debris Capture Robotic Arm). இதில் சிறிய கைகள்போல இருக்கும் ரோபோட்டிக் ஆர்ம் மூலமாக, விண்வெளியில் நகர்ந்து செல்லும் சோதனை செய்யப்பட உள்ளது. விண்வெளியில் ஆய்வு நிலையம் அமைக்கப்பட்டால், அதில் உள்ள பழுதை சரிபார்த்தல், எரிபொருள் நிரப்புதல் போன்ற பணிகளை இதன்மூலம் எளிதில் செய்ய முடியும். இன்னொரு முக்கியமான கருவி, கிராப்ஸ் (CROPS - Compact Research Module for Orbital Plant Studies). இதன்மூலம், புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளி சூழலில் தாவரங்கள் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட உள்ளன.