தீயணைப்பு தடையில்லா சான்று அரசாணைக்கு தடை கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தீயணைப்பு தடையில்லா சான்று அரசாணைக்கு தடை கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Published on

கட்டிட அனுமதிக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று வழங்க வகை செய்யும் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 4 வார காலத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுக்குமாடிக் கட்டிடங்கள், கல்வி மற்றும் வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களுக்கு ஒப்புதல் பெறும் முன்பாக தீயணைப்புத் துறையிடமிருந்தும் தடையில்லா சான்று பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு கடந்த நவ.21 அன்று பிறப்பித்த அரசாணையில் கட்டிட அனுமதிக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று பெறும் வகையில் நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தீயணைப்புத் துறை அதிகாரியான எம்.சுப்பிரமணியன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி மற்றும் தீயணைப்பு தடையில்லா சான்று பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்துகிறோம் எனக்கூறி அவற்றை தனியார் கையில் ஒப்படைத்து இருப்பது சட்டவிரோதமானது. பயிற்சி பெற்ற தீயணைப்புத் துறை அதிகாரிகள் மட்டுமே கட்டுமானங்களை முறையாக ஆய்வு செய்து தடையில்லா சான்று வழங்க முடியும். தனியார் மூலமாக வழங்கப்படும் தீயணைப்பு தடையில்லா சான்று 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்பது ஊழலுக்குத்தான் வழிவகுக்கும். எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அரசாணைக்கு தடை விதிக்க மறுத்தனர். மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு 4 வார காலத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in