

பாமக பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸும் அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணியும் வெளிப்படையாக எதிர்க்கருத்தை எடுத்துவைத்து மோதிக் கொண்டது தமிழக அரசியலில் விவாதப் பொருளானது. அதேசமயம், முதல் நாள், தந்தையுடன் கோபித்துக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்ட அன்புமணி மறுநாளே கட்சி நிர்வாகிகள் சகிதம் தேடிப்போய் ராமதாஸை சந்தித்துப் பேசியது பலருக்கும் பலவிதமான சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.
இதற்கு நடுவில், கட்சியின் இளைஞரணி தலைவராக ராமதாஸால் அறிவிக்கப்பட்ட அவரது பேரன் முகுந்தன், தான் அந்தப் பொறுப்பை ஏற்கவில்லை என அறிவித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்திலிருந்து புறப்பட்ட அன்புமணி சென்னை ஈசிஆரில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிவிட்டார்.
இதை அப்படியே விட விரும்பாத பாமக நிர்வாகிகள் சிலர், அன்று மாலையே ராமதாஸையும் அன்புமணியையும் சந்தித்துப் பேசினர். இதையடுத்து ஞாயிற்றுகிழமை தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த அன்புமணி, தந்தையுடன் மனம்விட்டுப் பேசினார். அப்போது பாமக சமூக நீதி பேரவையின் தலைவர் வழக்கறிஞர் பாலு உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “இது ஜனநாயக ரீதியில் செயல்படும் கட்சி, பொதுக்குழுவில் காரசார விவாதம் நடப்பது சகஜம். இது எங்கள் கட்சியின் உட்கட்சி பிரச்சினை. நாங்கள் பேசிப்போம்; நீங்கள் யாரும் விவாதிக்க வேண்டாம்” என்றார்.
தனது அக்காள் மகனுக்கு தனது மகளை கொடுத்திருக்கும் அன்புமணிக்கு, தனது மருமகனின் தம்பியான முகுந்தனுக்கு இளைஞரணி பதவி கொடுப்பதில் என்ன பிரச்சினை என பாமக சீனியர்கள் சிலரிடம் கேட்டோம். “திமுக-வை விமர்சிப்பது போல் பாமக மீதும் விமர்சனங்கள் வந்துவிடக் கூடாது என்பதால் தான் முகுந்தனுக்கு பதவி கொடுக்க எதிர்க்கிறார் அன்புமணி. மேலும், மற்றவர்களாக இருந்தால் விரட்டி வேலை வாங்க முடியும். ஆனால், அக்காள் மகனிடம் அப்படி நடந்துகொள்ள கொள்ளமுடியாது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்” என்றனர்.
இது தொடர்பாக பாமக சமூக நீதிப் பேரவையின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கே.பாலுவிடமும் பேசினோம். “பொதுக்குழுவில் ஜனநாயக முறைப்படி கருத்துப் பரிமாற்றம் நடப்பது ஒரு சாதாரண விஷயம். எந்தக் கட்சியில் கருத்து மோதல் இல்லை..? பொதுக்குழு என்றாலே கருத்துகளை விவாதிக்க வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ கூட்டத்தில் அடித்துக்கொள்வார்கள். அதன்பின் கருத்தொற்றுமை உருவாகும். பாமக இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பான கருத்தும் விவாதம் தான். ஆனால், நிறுவனர், தலைவர் என்பதை கடந்து அப்பா, மகன் என்பதால் ஊடகங்கள் இதை பெரிதாக்குகின்றன.
திமுக-வில் நடக்காத சண்டைகளா? மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகத்தையே கொளுத்தினார்கள். தற்போது இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள். தமிழக மக்கள் நலன் சார்ந்த 30 தீர்மானஙகள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. இதுதான் மக்களுக்கான செய்தி. ஆனால், கடைசி 2 நிமிடங்கள் மட்டுமே நடந்த நியமனம் தொடர்பான கருத்து விவாதத்தை மட்டுமே ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன.
ஞாயிற்றுகிழமை தைலாபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி வளர்ச்சி, சட்டமன்ற தேர்தல், விவசாய மாநாடு பற்றி விவாதித்தோம். இந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவது குறித்தும், சாதி வாரி கணக்கெடுப்பு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு பெறுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்தும் விவாதித்தோம். முகுந்தன் நியமன பிரச்சினை குறித்துத்தான் விவாதித்தோம் என்று சொல்வது தவறு.
அனைவரும் சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவின்படியே முகுந்தன் இளைஞரணி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஊடகங்கள் எது மக்களுக்கு சொல்ல வேண்டிய முக்கிய செய்தியோ அதை வெளியிட வேண்டும். அதைவிடுத்து, கடைசியாக சில நிமிடங்கள் நடந்த ஒரு விவாதத்தை மட்டும் பெரிதாக்க நினைப்பது ஊடக அறமில்லை” என்றார் பாலு.