Published : 04 Jul 2018 07:54 AM
Last Updated : 04 Jul 2018 07:54 AM

ஹஜ் பயணத்துக்காக ஆண்டுக்கு ரூ. 6 கோடி மானியம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5 கோடியில் பாதுகாப்பு பெட்டகம்: பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கட்டுமானத் தொழிலாளர்களுக்காக ரூ.5 கோடியில் பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள முஸ்லிம்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:

வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் 10 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ரூ.10 கோடி யில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்படும்.

ஹஜ் பயணம் மேற்கொள்ள முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. தமிழக அரசின் சார்பில் மானசரோவர், முக்திநாத் செல்ல இந்துக்களுக்கும், ஜெருசலேம் செல்ல கிறிஸ்தவர்களுக்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல ஹஜ் பயணம் மேற்கொள்ள ஒவ்வொரு ஆண்டும் ரூ. 6 கோடி மானியம் வழங்கப்படும். நடப்பாண்டில் இதன் மூலம் 3,728 பேர் பயனடைவர்.

தமிழகம் முழுவதும் உள்ள 502 பள்ளி, கல்லூரி விடுதிகளில் தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ.5 கோடியே 2 லட்சம் செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். தமிழகத்தில் உள்ள 1,343 விடுதிகளில் 1,265 விடுதிகள் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. இதில் 595 விடுதிகளில் ரூ.5 கோடியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 10 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் ரூ.3 கோடியே 8 லட்சத்து 33 ஆயிரம் செலவில் தரம் உயர்த்தப்படும். கட்டுமான பணியிடங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதல்கட்டமாக 25 ஆயிரம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்கள் கொண்ட பெட்டகம் ரூ.5 கோடியில் வழங்கப்படும். இதில் பாதுகாப்பு காலணிகள், தலைக்கவசம், பளிச்சிடும் மேலங்கி, கையுறைகள், கண்ணாடிகள் இருக்கும்.

சொந்த கட்டிடங்கள்

கோவையில் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்கக அலுவலகங்களுக்கு ரூ.4 கோடியே 3 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும். நடப்பாண்டில் கிருஷ்ணகிரி, தூத்துக்குடியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு தலா ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் சொந்தக் கட்டிடங்கள் கட்டப்படும். மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி திட்டங்களை 5 மண்டல இணை இயக்குநர்கள் கண்காணித்து வருகின்றனர். நடப்பாண்டில் விழுப்புரம், சேலம் மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகங்கள் ரூ.2 கோடியே 85 லட்சத்தில் அமைக்கப்படும்.

சென்னை அயனாவரம் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைக்கு ரூ.7 கோடியில் சி.டி. ஸ்கேன் கருவி வழங்கப்படும். 7 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளில் ரூ.3 கோடியே 82 லட்சத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு உருவாக்கப்படும். 75 அரசு ஈட்டுறுதி மருந்தகங்களில் உள்ள ஆய்வகங்களில் ரூ.2 கோடியே 84 லட்சத்தில் செமி ஆட்டோ அனலைசர், பைனாகுலர் மைக்ராஸ்கோப், இசிஜி இயந்திரம் போன்ற புதிய உபகரணங்கள் வழங்கப்படும்.

மருந்துகளை பாதுகாக்க 7 அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள் மற்றும் 4 மண்டல நிர்வாக அலுவலகங்களில் குளிர்சாதன அறை, ஜெனரேட்டர் கருவிகள் ரூ.1 கோடியே 80 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x