

அரசுப் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையிலிருந்து வைக்கத்துக்கு நேரடிப் பேருந்து இயக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில். சென்னையில் இருந்து வைக்கத்துக்கு 2 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கடந்த பண்டிகைத் காலங்களின்போது ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து, தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கி அந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி முதல்கட்டமாக சென்னையில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.