Published : 23 Jul 2018 08:13 PM
Last Updated : 23 Jul 2018 08:13 PM

100% உயர்வா?- வீட்டு வரி உயர்வை திரும்பபெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை உள்ளாட்சித்தேர்தலை முறையாக நடத்தி மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய சுமார் ரூ. 3000 கோடி நிதியை பெறாமல் 100 சதவீதம் வீட்டுவரியை உயர்த்துவதா? என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

“தமிழ்நாடு முழுவதும் சென்னை உள்ளிட்டு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவிகிதம், வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவிகிதம், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவிகிம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த வரி உயர்வினால் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். வாடகை பல மடங்கு உயர்த்தப்படும் அபாயம் ஏற்படும். இதனால் வீடில்லாமல் வாடகை வீட்டில் குடியிருப்போர்களின் வாழ்நிலையும் கேள்விக்குறியாகும். இந்த வரி உயர்வு ஏற்கனவே விலைவாசி உயர்வாலும், வேலையின்மையாலும் அவதிப்படும் மக்களின் தலையில் விழும் பேரிடியாகும்.

தமிழகஅரசின் இந்த அநியாய வரி உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. கடந்த இரண்டாண்டு காலமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்திக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலையில் தானடித்த மூப்பாக வரியை உயர்த்தியிருப்பது உள்ளாட்சி அமைப்பு சட்டத்திற்கே புறம்பானதாகும். உள்ளாட்சித் தேர்தலை நடத்தி மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய சுமார் ரூ. 3000 கோடி நிதியை பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த வரி உயர்வை தவிர்த்திருக்கலாம்.

ஏற்கனவே, சொத்து வரி, உள்ளிட்டு வரி உயர்வு கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் 2018 ஜூன் 28 அன்று இயக்கம் நடத்தியது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறது.

எனவே, அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் இந்த வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தமிழக அரசு இந்த வரி உயர்வை திரும்ப பெறாவிடின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் மக்கள் பங்கேற்புடன் கண்டன இயக்கம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசின் இந்த வரி உயர்வை எதிர்த்து அனைத்துப்பகுதி மக்களும் வலுவான கண்டனக்குரலெழுப்ப வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.” இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x