‘யார் அந்த சார்?’ - கரூர் முழுவதும் அதிமுக சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு

‘யார் அந்த சார்?’ - கரூர் முழுவதும் அதிமுக சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு
Updated on
1 min read

கரூர்: மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார்? என மாவட்டம் முழுவதும் அதிமுக சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் அண்மையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின்பேரில் பிரியாணி கடை வைத்திருந்த ஞானசேரன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஞானசேகரன் செல்போனில் பேசியபோது சார் (sir) என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தார்.

ஆனால் போலீஸார் அது திசை திருப்புவதற்காக சும்மா பயன்படுத்தியுள்ளார் என தெரிவித்தனர். ஆனால் அதிமுக தலைவர்கள் யார் அந்த சார்? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் மாயனூர், புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் இன்று (டிச. 29ம் தேதி) சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார் (SIR)?,ஹேஸ்டேக் குறியீடுடன் சேவ் அவர் டாட்டர்ஸ் (# Save Our Daughters) என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள நிலையில் கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் கிழித்து அகற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in