ராமதாஸ் - அன்புமணி இடையே பகிரங்க மோதல் வெடித்தது ஏன்? - முழு பின்னணி

பாமக புத்​தாண்டு சிறப்பு பொதுக்​குழு  கூட்​டத்​தில் இளைஞரணி தலைவராக 
மகள் வழிப் பேரன் முகுந்தனை கட்சி நிறு​வனர் ராமதாஸ் அறிவித்​ததற்கு 
எதிர்ப்பு தெரி​வித்து, தனக் கட்சி அலுவலகத்தின் தொலைபேசி எண்னை 
மேடை​யிலேயே அறிவித்த அண்புமணி. படம்​.எம்​.சாம்​ராஜ்
பாமக புத்​தாண்டு சிறப்பு பொதுக்​குழு கூட்​டத்​தில் இளைஞரணி தலைவராக மகள் வழிப் பேரன் முகுந்தனை கட்சி நிறு​வனர் ராமதாஸ் அறிவித்​ததற்கு எதிர்ப்பு தெரி​வித்து, தனக் கட்சி அலுவலகத்தின் தொலைபேசி எண்னை மேடை​யிலேயே அறிவித்த அண்புமணி. படம்​.எம்​.சாம்​ராஜ்
Updated on
2 min read

பாமக சிறப்பு பொதுக்குழுவில் இளைஞரணி தலைவராக ராமதாஸின் பேரன் நியமிக்கப்பட்டதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களிடையே மேடையிலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘கட்சியில் இருக்க இஷ்டம் இல்லாதவர்கள் கிளம்பலாம்; இது நான் தொடங்கிய கட்சி’ என ராமதாஸ் ஆவேசமாக தெரிவித்தார். தொடர்ந்து, தனிக் கட்சி அலுவலகம் தொடங்குவதாக அன்புமணி அறிவித்தார்.

புதுச்சேரி அருகேயுள்ள பட்டானூரில் நேற்று பாமக புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் அன்புமணி பேசிய பின்னர், ஏற்கெனவே பேசிய கட்சி நிறுவனர் ராமதாஸ் மீண்டும் பேசத் தொடங்கினார். "நான் தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 தொகுதிகளில் பாமக வெற்றி பெற வேண்டும் என கட்சித் தலைவர் அன்புமணிக்கு அறிவுறுத்தியுள்ளேன். இதற்காக பாமக மாநில இளைஞரணி தலைவராக பரசுராமன் முகுந்தனை அறிவிக்கிறேன். அவர் எல்லா வகையிலும் அன்புமணிக்கு உதவியாக இருப்பார். முகுந்தன் இன்று முதல் இப்பொறுப்பை ஏற்று, அன்புமணிக்கு உதவியாக செயல்படுவார்” என்றார்

உடனே ஆவேசத்துடன் மேடையிலிருந்த மைக்கை எடுத்துப் பேசிய அன்புமணி, “எனக்கு உதவி வேண்டாம். அவன் 4 மாதங்களுக்கு முன்புதான் வந்தான். அவனுக்கு என்ன அனுபவம் உள்ளது? அவனுக்கு இளைஞரணி தலைவர் பதவியா? நல்ல அனுபவசாலியாக போடுங்கள்” என்றார். உடனே ராமதாஸ், “யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். கேட்கவில்லையெனில் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இது நான் உண்டாக்கிய கட்சி” என்றார்.

உடனே அன்புமணி மெல்லிய குரலில், ‘அதுசரி’ என்று கூற, மீண்டும் ராமதாஸ், “சரின்னா போ. முகுந்தன் மாநில இளைஞரணி தலைவராக நியமிக்கப்படுகிறார். கை தட்டுங்கப்பா” என்று கூறி விட்டு, கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணியைப் பார்த்து நன்றி தெரிவிக்குமாறு கூறினார்.

இதனால் ஆவேசமடைந்த அன்புமணி, “சென்னை பனையூரில் எனக்கு ஒரு புதிய அலுவலகம் ஆரம்பித்துள்ளேன். இனி அதுதான் என் அலுவலகம். கட்சித் தொண்டர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம்" என்று கூறி, அந்த அலுவலகத்தின் தொலைபேசி றிவித்து, தொண்டர்கள் குறித்துக் கொள்ளுமாறு கூறினார்.

மீண்டும் பேசிய ராமதாஸ், “மீண்டும் சொல்கிறேன், இனி இளைஞரணி தலைவர் முகுந்தன்தான். இன்னொரு அலுவலகத்தை நடத்துங்கள், ஆனால் முகுந்தன் உதவியாக இருப்பார். விருப்பம் இல்லாவிட்டால் அவ்வளவுதான், வேறு என்ன சொல்ல முடியும்? நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும், இது நான் ஆரம்பித்த கட்சி, நான் சொல்வதைத்தான் செய்ய வேண்டும். யாராக இருந்தாலும் இந்த முடிவுக்கு விருப்பம் இல்லாதவர்களும், என் பேச்சைக் கேட்காதவர்கள் விலகிக்கொள்ளலாம்” என்று கூற, அன்புமணி அமைதியாக அமர்ந்திருந்தார்.

ராமதாஸ், அன்புமணி இடையேயான காரசார விவாதத்தைக் கண்டு, அங்கிருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடர்ந்து, பொதுக்குழுவுக்கு வந்தவர்கள் அனைவரும் உணவருந்திச் செல்லுமாறு கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார். விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் நன்றி கூற, கூட்டம் கலைந்தது. இந்த சர்ச்சைக்குக் காரணமான, இளைஞரணித் தலைவராக அறிவிக்கப்பட்ட முகுந்தன் கூட்டம் முடியும் வரை மேடைக்கு வரவில்லை.

யார் இந்த முகுந்தன்?- பாமக இளைஞரணித் தலைவராக இருந்த அன்புமணி, கட்சித் தலைவராக 2022 மே மாதம் பதவியேற்றார். தொடர்ந்து, தற்போது கவுரவத் தலைவராக உள்ள ஜி.கே.மணியின் மகனான, லைகா திரைப்பட நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள தமிழ்க்குமரனுக்கு 2022 அக்டோபரில் இளைஞரணித் தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால், 3 மாதங்களில் தமிழ்க்குமரன் ராஜினாமா செய்தார். இதற்கிடையே, ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தியின் மகனான முகுந்தனை மாநில ஊடகப் பிரிவு செயலாளராக நியமித்த ராமதாஸ், அவரை தன்னுடன் வைத்துக்கொண்டார். ராமதாஸ் பங்கேற்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் முகுந்தன் பங்கேற்று வருகிறார். ராமதாஸ்-அன்புமணி ஆகியோருக்கிடையே பனிப்போர் நிலவி வருவதாக அண்மைக்காலமாக பேசப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், நேற்று நடந்த இந்த பொதுக்குழுவில் இருவரிடையிலான நேரடி மோதல் தமிழக அரசியலில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in