மதுவுக்கு எதிராக விளம்பரம் செய்துவிட்டு மதுபான கடைகளை அதிகரிப்பதால் என்ன பயன்? - ஐகோர்ட் கேள்வி

மதுவுக்கு எதிராக விளம்பரம் செய்துவிட்டு மதுபான கடைகளை அதிகரிப்பதால் என்ன பயன்? - ஐகோர்ட் கேள்வி
Updated on
1 min read

மதுவுக்கு எதிராக விளம்பரம் செய்துவிட்டு, மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் என்ன பயன் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தேனி மாவட்டம் பூதிபுரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் குமாரலிங்கம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பூதிபுரம் கிராமத்தில் உள்ள ராஜபூபால சமுத்திர கண்மாய் கரைப்பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க நவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த இடத்தில் பெண்கள் பொதுக் கழிப்பிடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த மதுபானக் கடை அரசின் கொள்கை முடிவின்போது மூடப்பட்டது.

இப்பகுதியில் ஏற்கெனவே 3 மதுபானக் கடைகள் செயல்படுகின்றன. 4-வதாக இன்னொரு மதுபானக் கடை அமைக்க நடவடிக்கை எடுப்பது சட்டவிரோதமாகும். எனவே மதுபானக் கடை அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. டாஸ்மாக் தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, "மதுபானக் கடை திறக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்" எனத் தெரிவித்தார்.

இதையொடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் பெண்கள் பொதுக் கழிப்பறை உள்ளது. பேருந்து நிலையம் உள்ளது. திறந்த நிலையில் கிணறுகளும் உள்ளன. இவ்வாறான சூழலில் மதுபானக் கடை திறக்க அனுமதி வழங்க முடியாது. இருக்கும் மதுக்கடைகளை குறைப்பதற்கு வழியைப் பாருங்கள். அதை செய்யாமல் மதுக்கடைகளை அதிகப்படுத்துவதால் என்ன பயன் கிடைக்கப்போகிறது?

தற்போது மூலை முடுக்கெல்லாம் மதுக்கடைகள் உள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழக அரசு அனைத்து தொலைக்காட்சிகளிலும் குடி குடியை கெடுக்கும் என விளம்பரம் செய்து வருகிறது. இவ்வாறு கடைகளை அதிகப்படுத்திவிட்டு, விளம்பரம் செய்வதால் என்ன பயன் உள்ளது? பூதிப்புரம் கண்மாய் பகுதியில் மதுக்கடை அமைக்க தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in