

குறிப்பிட்ட வாரிசுகளுக்கு மட்டும் சொத்துகளை தானமாக வழங்குவது சட்டவிரோதம் ஆகாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த ரெங்கநாயகி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எங்கள் தயார் ஆண்டாளம்மாள் பெயரில் இருந்த 2 ஏக்கர் விவசாய நிலத்தை வீட்டுமனைகளாக மாற்ற தேனி நகர திட்டமிடல் உதவி இயக்குநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதில் விதிமீறல் உள்ளது. எனவே, அதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி எல்.விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஆண்டாளம்மாள் என்பவருக்கு மனுதாரர் ரெங்கநாயகி மற்றும் ரேணுகா, குணசேகரன் உட்பட சில பிள்ளைகள் உள்ளனர். அவர், இதே பகுதியில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை 1970-ம் ஆண்டில் சொந்தமாக்கிக் கொண்டார். 2008-ம் ஆண்டில் அந்த சொத்தை ரேணுகா, மற்றொரு மகள் என 2 பிள்ளைகளுக்கு தானமாகப் பதிவு செய்து கொடுத்துள்ளார். ஆண்டாளம்மாள் 38 ஆண்டுகளாக அனுபவித்து வந்த சொத்தை மனப்பூர்வமாக தனது 2 பிள்ளைகளுக்கு மட்டும் தானமாக வழங்கியது சட்டவிரோதம் ஆகாது.
அதேநேரம் அந்த 2 ஏக்கர் நிலம் தொடர்பாக 2010-ம் ஆண்டில் தேனி மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ரேணுகா தரப்பினருக்கு ஆதரவாக 2016-ம் ஆண்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக ரெங்கநாயகி, அவருடன் பிறந்தவர்கள் மேல்முறையீடு செய்யவில்லை. எனவே 2 ஏக்கர் நிலத்தை பொறுத்தவரை அந்த தீர்ப்புதான் இறுதியானது.
எனவே, அந்த நிலத்தை கிரயம் செய்த தனிநபர், அங்கு வீட்டு மனைக்கான அங்கீகாரம் பெற்றதில் இந்த நீதிமன்றம் தலையிட தேவையில்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.