

சென்னை: “குற்றவாளிகளின் கூடாரமாக திகழ்கிறதா திராவிட மாடல் அரசு?” என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் யுவராஜா கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “சென்னை - கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, அங்கு அடையாளம் தெரியாத 2 பேர் வந்து மாணவனை தாக்கியுள்ளனர். மாணவனை அடித்து துரத்திவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இந்த புகாரின் பேரில் பி.என்.எஸ்.64-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கிய நிலையில், இது சம்பந்தமாக கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி எழும்புகிறது. ஒவ்வொரு நாளும் விடியும் பொழுது படுகொலைச் சம்பவங்கள், போதைப்பொருள் புழக்கம், குற்ற செயல்களும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர், பெண்கள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத இருண்ட காலத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையில் தமிழகம் தற்போது இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.
பொறியியல் துறையில் தமிழகத்தை ஏன் இந்தியாவையே தலைநிமிர வைத்துக் கொண்டிருக்கும் தலைசிறந்த பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவிக்கு இப்படி நேர்ந்தது மிகவும் வெட்கக்கேடான விஷயமாகும். இதைவிட அதிர்ச்சி ஊட்டும் நிகழ்வு அந்தப் பல்கலைக்கழகத்தில் சிசிடிவி செயல்பாட்டில் இல்லை என்பதை எப்படி நம்புவது? அண்ணா பல்கலைக்கழகத்தில் சிசிடிவி வேலை செய்யவில்லை என்று விளக்கம் கொடுத்த அரசை எப்படி நம்புவது?
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள் அதுபோல இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த அரசின் அவல நிலை வெளிப்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு பாதுகாப்பு குறைபாட்டுடன் தான் அண்ணா பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறதா இந்த அரசு?
கைது செய்யப்பட்டுள்ள பாலியல் குற்றவாளி திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவன் என்றும், உதயநிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே ஒரு முறை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தவறாக நடக்க முயற்சி செய்ததால் கைது செய்யப்பட்டு வெளிவந்தவர் என்றும் பத்திரிகைகளில் செய்தி வெளி வருகின்றன.
குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி சுதந்திரமாக மறுபடியும் பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது காவல் துறையின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட அவல நிலைக்கு போராட வந்தவர்களை தடுக்க வந்த காவல்துறை பெண்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் முயற்சித்து இருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டு இருக்காது.
ஸ்டாலின் அரசு பொறுப்பேற்று இந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற போர்வையை உடுத்திக் கொண்டு போதைப்பொருள் புழக்கம், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என எல்லா கொடுஞ்செயலுக்கும் பின்னால் திமுக நிர்வாகிகள் இருந்து வருவது மக்களை வேதனை அடையச் செய்கிறது.
மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல் துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமாகா சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.