கடலூரில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

கடலூரில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
Updated on
1 min read

கடலூர்: கடலூரில் 20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கடற்கரையில் பால் ஊற்றி, மலர்தூவி பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் எழுந்த சுனாமி பேரலைகள் தமிழக கடற்கரையை தாக்கி, ஆயிரக்கணக்கானோரை பலிவாங்கியது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுனாமி பேரலையில் சிக்கி 610 பேர் பலியாகினர்.

இந்நிலையில், சுனாமி பேரலையால் பலியானவர்களின் 20-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.26) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பில் உள்ள சுனாமி நினைவுத் தூணுக்கு சுனாமியில் பலியானவர்களின் உறவினர்கள் மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பாக அதன் தலைவர் சுப்பராயன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக சென்று கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர். அப்போது பெண்கள் கடலில் பால் ஊற்றியும் மலர்தூவியும், துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். கடற்கரை மணலில் மெழுகுவர்த்தி ஏற்றியும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சுனாமியால் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் யாரும் இன்று மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை. இதனால் திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், முதுநகர், கிஞ்சம்பேட்டை ஆகிய இடங்களில் மீன் மார்க்கெட்டுகள் அடைக்கப்பட்டுள்ளன. இதுபோல சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை, பிச்சாவரம் பகுதிகளிலும் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in