

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு வரும் பெண்களும், வயதானவர்களும் இயற்கை உபாதைகளை கழிக்க அவசரத்துக்கு ஒதுங்க இடம் தேடி அலையும் நிலை கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட 100 ஏக்கர் பரப்பில் இயங்கி வரும் உயர் நீதிமன்ற வளாகத்தில், 70-க்கும் மேற்பட்ட கீழமை நீதிமன்றங்களும், மாநில மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு போன்றவை இயங்கி வருகின்றன.
தவிர வழக்கறிஞர்களுக்கான சேம்பர்கள், சட்ட அலுவலர்களுக்கான வளாகம், காவல் கட்டுப்பாட்டு அறை, காவல் நிலையங்கள், ரயில்வே முன்பதிவு மையம், தீயணைப்பு நிலையம், தபால் அலுவலகம், இந்தியன் வங்கி, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் போன்றவையும் உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் இயங்கி வருகின்றன. தற்போது சராசரியாக உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஊழியர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள், போலீஸார் என தினமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர்.
உயர் நீதிமன்ற பாரம்பரிய கட்டிடத்துக்குள் போதிய எண்ணிக்கையில் கழிப்பறைகள் சுத்தமாக, பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் உயர் நீதி மன்ற வளாகத்துக்குள் குடும்பநல நீதிமன்றம் அருகே ஒரே ஒருகட்டண கழிப்பறை மட்டுமே உள்ளது. இந்த கழிப்பறை எங்கு இருக்கிறது என்பது பொதுமக்கள் பலருக்கும் தெரிவதில்லை. குறிப்பாக எப்போதும் பரபரப்பாக உள்ள ஆவின் நுழைவாயில் பகுதியில் பொதுமக்களின் உபயோகத்துக்கு எந்த கழிப்பறையும் கிடையாது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் கே.விஷாலினி கூறுகையில், “வழக்கறிஞர்களுக்கு போதுமான கழிப்பறைகள் இருக்கின்றன. ஆனால் நீதிமன்றங்களுக்கு வருகை தரும் பொதுமக்களுக்குத்தான் போதிய கழிப்பறைகள் இல்லை. இதனால் முதியவர்களும், பெண்களும் ஆவின் நுழைவாயில் பகுதியில் அவசரத்துக்கு ரெஸ்ட் ரூம் தேடி அலைவது வேதனையான விஷயம். குறிப்பாக பெண்கள் ரெஸ்ட் ரூம் எங்கு இருக்கிறது என்பதை ஆண்களிடம் கேட்க முடியாமல் தர்ம சங்கடத்தில் நெளிய நேரிடுகிறது.
இதேபோல விசாரணை கைதிகள், அவர்களை அழைத்துவரும் பெண் போலீஸாரின் நிலைமையும் பரிதாபத்துக்குரியது. ஒரு சில வழக்கறிஞர்கள் சங்கங்களிலும் போதிய கழிப்பறை வசதிகள் இல்லை. குறைந்தபட்சம் ரெஸ்ட் ரூம் குறித்த அறிவிப்பு பலகைகளை ஆங்காங்கே வைத்தாலாவது பெண்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
ஏற்கெனவே ஒரு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் வெளியே கழிவுநீர் தேங்காமல், சிறுநீர் கழிப்பிட பகுதிகளையும் பூந்தொட்டிகள் வைத்து அலங்கரிக்க உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவு இன்று வரை அமல்படுத்தவில்லை” என்றார்.வழக்கறிஞர் டி.எஸ்.பார்த்தசாரதி கூறுகையில், “எஸ்பிளனேடு மற்றும் ஆவின் நுழைவாயில் பகுதியில் தான் பொதுமக்களின் நடமாட்டம் அதிகம்.
அதேபோல பார் கவுன்சிலில் நடைபெறும் புதிய வழக்கறிஞர்களின் பதிவு நிகழ்வுக்கு பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரக்கணக்கானோர் திருவிழா கூட்டம்போல உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே காத்திருக்கின்றனர். உயர் நீதிமன்றத்துக்கு வெளியே மாநகராட்சியால் பராமரிக்கப்படும் இலவச கழிப்பறைகள் யாருக்கும் பயனின்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் அவர்களும் உயர் நீதிமன்றத்துக்குள் கழிப்பறைகளை தேடி அலைகின்றனர். அவசரத்தில் ஆண்களும், பெண்களும் உயர்நீதிமன்றத்தின் சுற்றுப்பகுதி நடைபாதைகளை சிறுநீர் கழிப்பிடமாக மாற்றி விடுவதால் நடமாட முடியாத நிலை உள்ளது.
உயர் நீதிமன்ற சட்ட அலுவலர்கள் அலுவலகம், கேண்டீன் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்பட்ட உபயோகத்துக்காக பூட்டி வைக்கப்பட்டுள்ள கழிப்பறைகளை திறந்து யாராவது பயன்படுத்தினால், அவர்களிடம் இரவல் கேட்டு ஆண், பெண் வித்தியாசமின்றி கழிவறைகளைபயன்படுத்தும் அவலமும் நடக்கிறது.
எனவே ஆவின் நுழைவாயில் பகுதியில் வழக்கறிஞர்கள் கேண்டீனை அடுத்த பழைய கட்டிட இடிபாடுகளுடன் கிடக்கும் பகுதியில் நிரந்தரமாக சிறிய அளவில் கட்டண கழிப்பறை கட்டிக்கொடுத்தால் அது அனைத்து தரப்பினருக்கும் பேருதவியாக இருக்கும். அதுவரை தற்காலிக ஏற்பாடாக மாநகராட்சியின் இலவச மொபைல் கழிவறை வாகனங்களை ஆவின் நுழைவாயில் அருகே நிறுத்தினால் ரெஸ்ட் ரூம் தேடி அலையும் பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்றார்.
இதுதொடர்பாக நீதித்துறை வட்டாரத்தில் கேட்டபோது, ஏற்கெனவே உயர்நீதிமன்ற வளாகத்தில் போதிய எண்ணிக்கையில் கழிப்பறைகள் உள்ளன. தனியாக கட்டண கழிப்பறையும் உள்ளது. கீழமை நிதிமன்றங்களில் உள்ள கழிப்பறைகளை பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். அங்கு யாரையும், யாரும் தடுப்பது இல்லை. இருந்தாலும் ஆவின் நுழைவாயில் மற்றும் உயர் நீதிமன்றத்துக்கு வெளியே கூடுதலாக கட்டண கழிப்பறை அமைப்பது குறித்தும், மாநகராட்சியின் மொபைல் கழிவறை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.