

காஞ்சிபுரம் மாநகருக்கு வெளியில் பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு 7 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் இடம் தேர்வு செய்வதிலேயே இழுபறி நீடிக்கிறது. காஞ்சிபுரத்தில் தற்போதுள்ள பேருந்து நிலையம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், சென்னை, வந்தவாசி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவடங்களுக்கும், தென்மாவட்டங்கள், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் செல்கின்றன. அனைத்து பேருந்துகளும் காஞ்சிபுரம் மாநகருக்குள் வந்து செல்ல வேண்டி உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
காஞ்சிபுரம் மாநகரம் வேகமாக வளர்ந்து வரும் நகரம். ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளில்சிப்காட் உருவாகி உள்ளது. அங்கு பணி செய்யும் தொழிலாளர்களுக்கான பேருந்துகள் உட்பட பல்வேறு பேருந்துகள் வந்து செல்கின்றன.
இதனால் காஞ்சிபுரம் நகரம் கடும் போக்குவரத்து நெரிசலை சந்திக்கிறது.தற்போது இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக சென்னை செல்லும் பேருந்துகள் வெள்ளைகேட் வழியாக சென்று செல்லும்படியும், சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வரும் பேருந்துகள் பொன்னேரிக்கரை வழியாக செல்லும்படியும் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் காந்தி வீதி உட்பட நகரின் பல்வேறு வீதிகளும் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளன.
இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும் என்றால் பிரதான பேருந்து நிலையத்தை காஞ்சிபுரம் நகருக்கு வெளியே அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் கீழ்கதிர்பூர் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் பழனிசாமி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அறிவித்தார்.
இதற்காக ரூ.38 கோடியில் பேருந்து நிலையம் அமைக்க உடனடியாக அரசாணையும் வெளியிடப்பட்டது. பேருந்து நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் அனாதீனம் நிலம். சில விவசாயிகள் பயன்பாட்டில் இருந்ததால் அவர்கள் நீதிமன்றம் சென்றதை தொடர்ந்து பேருந்து நிலையம் அமைக்க பூமி பூஜை கூட போடாமல் தடை ஏற்பட்டது.
இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பேருந்து நிலையம் அமைக்கும் இடத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டது. சித்தேரிமேடு, காரப்பேட்டை உட்பட பல்வேறு இடங்களை ஆய்வு செய்தும் இடத்தை தேர்வு செய்ய முடியவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக இடம்கூட தேர்வு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்காமல் உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலரான சீனுவாசன் என்பவரிடம் கேட்டபோது, ‘காஞ்சிபுரம் மாநகரம் கோயில், பட்டுக்கு புகழ் பெற்ற நகரம் என்பதால் நகருக்கு வரும் மக்கள் அதிகம். பேருந்து நிலையம் நகரின் மையப் பகுதிக்குள் வைக்கப்பட்டிருப்பதால் அனைத்து பேருந்துகளும் நகரத்துக்குள் வருகின்றன.
இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. நகருக்கு வெளியே பேருந்து நிலையத்தை அமைத்தால் தேவை உள்ளவர்கள் மட்டும் உள்ளூர் பேருந்துகள் மூலம் நகரத்துக்குள் வரலாம். அதன்மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும்’ என்றார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் நவேந்திரனிடம் கேட்டபோது, ‘வருவாய் துறையுடன் இணைந்து பேருந்து நிலையத்துக்காக இடம் தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இடம் தேர்வு செய்யும் பணி முடிந்தவுடன் விரைவில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.