Published : 02 Jul 2018 02:00 PM
Last Updated : 02 Jul 2018 02:00 PM

பயணிகள், வாகன ஓட்டிகள் உயிருடன் விளையாடிய சம்பவம்: சென்னை சாலையில் பேப்பர் படித்தபடி பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்

பேப்பர் படித்தபடி ஓட்டுநர் ஒருவர் பேருந்தை ஓட்டினார். அதைத்  தட்டிக்கேட்ட பயணியை ஓட்டுநர் அலட்சியம் செய்ததால் அதைக் காணொலியாக எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் நாளுக்கு நாள் பெருகிவரும் வாகனங்களால் சாலையில் எந்நேரமும் விபத்து நிகழும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. தான் உடனடியாக செல்லவேண்டும் என்ற ஆர்வத்தில் ஒவ்வொருவரும் சாலையில் முந்திச் செல்வதற்காக போட்டி போட சென்னை சாலைகள் ரேஸ் மையங்களாக மாறி வருகின்றன.

குறிப்பாக இரு சக்கர வாகனங்களின் பெருக்கமும், அவர்கள் ஓட்டும் வேகமும் வாகனங்களிடையே புகுந்து செல்வது பல நேரம் விபத்துக்கு வழி வகுக்கிறது. இதுபோன்ற நேரங்களில் சென்னையின் குறுகிய போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் வாகனத்தை இயக்க சென்னை மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்படுவதை பார்க்க முடியும். 40 அடி நீள பேருந்தை வலது இடதுபுறம் பக்கவாட்டுக் கண்ணாடியில் பார்த்தபடி பேருந்தை இயக்க வேண்டும்.

பேருந்தில் உள்ள புயணிகளின் பாதுகாப்பு மட்டுமல்ல, வெளியே பக்கவாட்டில் வாகனம் ஓட்டுபவர்ககள் மீதும் பேருந்து மோதிவிடாமல் ஜாக்கிரதையாக ஓட்டவேண்டிய நிலையில் ஓட்டுநர்களின் பொறுப்புணர்வு மிக முக்கியமான ஒன்று.

இந்நிலையில் சென்னையில் மாநகரப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் அலட்சியமாக வாகன ஓட்டிகளின் உயிரோடு விளையாடும் விதமாக பேப்பர் படித்தபடி வாகனம் ஓட்டிய காணொலிக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடியிலிருந்து திருவான்மியூர் நோக்கிச் சென்ற பேருந்து என்று கூறப்பட்டாலும் அதை யாரும் உறுதிப்படுத்தவில்லை. அதன் ஓட்டுநருக்கு பேருந்து ஓட்டும்போதே அன்றைய செய்தித்தாளை எடுத்துப் படிக்க ஆரம்பித்துவிட்டார். பேருந்து ஓடிக்கொண்டிருக்கும்போதே செய்தித்தாளைப் பரப்பி ஸ்டியரிங்கின் மீது வைத்துக்கொண்டு படித்தபடியும், சில நேரம் சாலையை பார்த்தபடியும் பேருந்தை ஓட்டிச் சென்றார்.

இதைப் பார்த்த பயணிகள் திடுக்கிட்டு சார் டிரைவிங் செய்துகொண்டே பேப்பர் படிக்கிறீர்களே என கேட்டுள்ளனர். அதை அவர் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் பேப்பரையும், சாலையையும் மாறி மாறிப் பார்த்தபடி பேருந்தை இயக்கினார். இதை முன் சீட்டில் உட்கார்ந்திருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த காணொலிக் காட்சி பரபரப்பாகி வருகிறது. இதையடுத்து போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்த ஓட்டுநர் யார் என விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளனர். சாலையில் வாகனங்களை இயக்கும்போது செல்போன் பேசிக்கொண்டு இயக்குவது என்பதைத் தாண்டி தற்போது பேப்பர் படித்துக்கொண்டு ஓட்டும் அளவுக்கு ஓட்டுநர்கள் துணிவு பெற்றுவிட்டனர். இவர்களை நம்பி பேருந்தில் பயணம் செய்யும், பக்கவாட்டில் வரும் வாகன ஓட்டிகளின் உயிர்தான் கேள்விக்குறி.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக மக்கள் தொடர்பு அதிகாரியிடம் 'இந்து தமிம்' இணையதளம் சார்பாக தொடர்பு கொண்டு கேட்டபோது இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விபரமாக அறிக்கை கேட்டுள்ளதாகவும், அறிக்கை வந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x