ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: அரசியல் கட்சித் தலைவர் மற்றும் மடாதிபதிகள் குறித்து பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறாக பேசியதாக ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கடந்த டிச.15-ம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பெண் வழக்கறிஞர் குறி்த்து தரக்குறைவாக விமர்சித்ததாக மற்றொரு வழக்கில் திருவல்லிக்கேணி போலீஸாரும் அவரை கைது செய்தனர்.

தனது தந்தையை சட்டவிரோதமாக போலீஸார் பொய் வழக்குகளில் கைது செய்துள்ளதாக கூறி அவரது மகன் முகுந்தன் ரங்கராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது தந்தையின் கைது நடவடிக்கைகளை சட்டவிரோதம் என அறிவித்து அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கே்ாரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கைது செய்யப்பட்டுள்ள ரங்கராஜன் நரசிம்மன் சிறையில் சாப்பிடாமல் இருந்து வருகிறார் என்றும், மற்ற வழக்குகளில் அவரை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும், அவருடைய வீட்டுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும், என வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், உரிய சட்டவிதிகளை பின்பற்றியே அவரை கைது செய்து இருப்பதாகவும். போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் கூறி அவர் அவதூறாக பேசிய வீடியோ காட்சிகளை நீதிபதியிடம் சமர்ப்பித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறையில் உள்ள ரங்கராஜன் நரசிம்மன் அரசியல் தலைவர்கள் பற்றியோ அல்லது மடாதிபதிகள் பற்றியோ எதுவும் பேசக்கூடாது. சாட்சிகளை மிரட்டக்கூடாது. அவர்களை தொடர்புகொள்ளக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in