

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் 5 வீரர்கள் உயிரிழந்தனர், 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ராணுவத்தின் ‘ஒயிட் நைட் படைப்பிரிவினர்’ முகாமிட்டுள்ளனர். இங்குள்ள முகாமில் இருந்து ராணுவ வாகனம் ஒன்று வீரர்களுடன் பனோய் பகுதிக்கு நேற்று சென்றது.
அப்போது அந்த வாகனம், சாலையில் இருந்து விலகி, அருகில் உள்ள 350 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். 8 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. காயம் அடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணுவ வாகன விபத்தில் 5 வீரர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு ஒயிட் நைட்ஸ் படைப்பிரிவின் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.