Published : 25 Dec 2024 12:54 AM
Last Updated : 25 Dec 2024 12:54 AM
‘இந்தியாவிலேயே ஆணவக் கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை, அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முழுவதும் பட்டிதொட்டிகளில் எல்லாம் பகுத்தறிவு கொள்கையை பெரியார் பரப்பினார். நாட்டில் உள்ள மத, சாதி வெறி சக்திகளுக்கு சவாலாக, சமாதி கட்டிய நபராக திகழ்ந்தவர் பெரியார். சாதிய ஆதிக்கத்துக்கு எதிராக தனது வாழ்நாள் முழுவதும் போராட்டம் நடத்தியவர். பகுத்தறிவு சிந்தனையை பரப்பி பெண்ணடிமை கூடாது என வலியுறுத்தினார்.
தமிழகத்தில் பெரியார் வழி வந்த திராவிடர் இயக்கங்கள் தான் அரை நூற்றாண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. ஆனால், இந்தியாவிலேயே ஆணவக் கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தலித் மக்களுக்கு அதிகளவில் கொடுமைகள் நடைபெறும் மாநிலமாகவும் தமிழகம் உள்ளது.
சாதிய உணர்வுகளும், சாதிய அணிசேர்க்கையும் கொடி கட்டி பறக்கிறது. எனவே, பெரியாரின் கொள்கைளை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT