பால்கனி இடிந்து விழுந்தும் வீடுகளில் இருந்து வெளியேறாத மக்கள் @ பட்டினப்பாக்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் நேற்று பால்கனி இடிந்து விழுந்தது. இருப்பினும் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற மறுத்து வருகின்றனர்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் 1965 முதல் 1977 காலகட்டத்தில் 6.20 ஹெக்டேர் பரப்பளவில் 1356 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ள. அங்கு தரை மற்றும் முதல் தளம், தரை மற்றும் 3 தளம். தரை மற்றும் 4 தளம் என 3 வகையாக குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு 60 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளன. சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள் குழு அந்த கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து, 10 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ தகுதியற்றது என சான்றளித்து விட்டன.

இதனிடையே, கடந்த டிச.4-ம் தேதி இரவு 134-வது பிளாக 3 மாடி தளத்தில் ஜன்னலின் சன்ஷேட் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கள ஆய்வு செய்து, பயனாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதியில் வசிக்கும் எலக்ட்ரீஷியன் மோகன் என்பவர் 3-வது மாடி பால்கனியில் ஏணியை வைத்து ஏறியபோது, பால்கனி உடைந்து விழுந்துள்ளது. இதில் அவர் 3-வது மாடியில் இருந்து துணி காயவைக்க கட்டிய கயிறு, குடிநீர் குழாய்கள் ஆகியவற்றின் மீது விழுந்து, பின்னர் தரையில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது விழுந்துள்ளார். இதில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. அக்கட்டிடங்கள் உறுதியற்று இருந்தும் அங்கு வசிப்போர் வீட்டை விட்டு வெளியேற மறுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறும்போது. “மக்கள் பிரதிநிதிகள் அளிக்கும் வாக்குறுதியை நம்ப முடியாது. ஒருவேளை திட்டத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்காமல் நிதியில்லை என கிடப்பில் போட்டுவிட்டால் நாங்கள் அவதிக்குள்ளாவோம். மயிலாப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.18 ஆயிரத்துக்கு குறைவாக ஒரு படுக்கை அறை கொண்ட வாடகை வீடு கிடைப்பதில்லை.

அதனால் எங்கள் நினைவு அரசுக்கு இருக்க வேண்டும் என்றால், எங்களுக்கு தற்காலிக மாற்று இடத்தை கொடுக்க வேண்டும். மக்கள் வாடகை வீடுகளுக்கு பிரிந்து சென்றுவிட்டால், அரசு வீடு கட்டி தர தாமதம் செய்யும்போது ஒன்று கூடி போராடுவது சிரமம். அதனால் எங்களுக்கு தற்காலிக மாற்று இடம் கொடுத்தால் மட்டுமே இங்கிருந்து செல்வோம்” என்றனர்.

இது குறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது. “அப்பகுதியில் 95 சதவீதம் கணக்கெடுக்கும் பணி முடிந்துவிட்டது. இன்றுடன் பணிகள் நிறைவடையும். அங்கு வசிப்பவர்களில் 90 சதவீதம் பேர் வாடகைதாரர்கள். அங்கு வீடுகள் இடிக்கப்பட்டவுடன் விரைவாக வீடு கட்டி கொடுக்கப்படும். விரைவில் அப்பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி. அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in