சமூக வலைதளங்களில் ஆர்வம்: 2016 தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்

சமூக வலைதளங்களில் ஆர்வம்: 2016 தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்
Updated on
1 min read

சமூக வலைதளங்களில் ஈடுபாட்டை அதிகரித்து, இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்க தமிழக கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து அதற்கான ஆயத்தப் பணிகளை இப்போதே தொடங்கியுள்ளன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. புதிய வாக்காளர்கள், இளைஞர் களிடையே சமூக வலைதள பிரச்சாரத்துக்கு பெரும் வரவேற்பு இருந்தது. இதனால், பாஜக தேசிய அளவில் இதை சரியாக பயன்படுத்தியது.

தமிழகத்தில் அதிமுகவும் இந்த உத்தியைக் கையாண்டது. ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை முதன்முதலில் செயல் படுத்தியது அதிமுகதான். நாடாளுமன்றத் தேர்தலின்போது ‘அம்மா வாய்ஸ்’ சேவை மூலம் முதல்வர் ஜெயலலிதா வாக்கு கேட்டது குறிப்பிடத்தக்கது. தேர்தல் வெற்றிக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் நன்றியும் தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் சமூக வலைதளங்களில் பக்கங்களை தொடங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதேபோல தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இணைய தளம் தொடங்கின.

இந்நிலையில், 2016-ல் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தங்களது சமூக வலைதளப் பக்கங்களை வலுப்படுத்தவும், புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ளவும் கட்சிகள் இப்போதே தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டன.

திமுக தனக்கென்று ஒரு புதிய இணையதள அணியை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக கட்சியின் நான்கு சீனியர்களை ஒருங்கிணைப்பா ளர்களாக நியமிக்கவும், ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் படித்த இளைஞர்கள் 3 பேரை நியமிக்கவும் திமுக தலைமை ஆயத்தமாகி வருகிறது.

தமிழக பாஜகவோ வேறு விதமான வியூகத்தை தீட்டி யுள்ளது. குறிப்பிட்ட 70 தொகுதிகளை தேர்ந் தெடுத்து, அவற்றில் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களை பெருமளவில் கொண்ட தொகுதிகளாகும். இந்தத் தொகுதிகளில் உள்ள படித்த மற்றும் ஐ.டி. துறையைச் சார்ந்த இளைஞர்களை கட்சியில் சேர்க்கவும், அவர்களுக்கு பதவிகளை கொடுத்து களத்தில் இறக்கவும் திட்டமிட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. இதற்காக மாநில அளவில் ஒருங்கிணைப்புக் குழுவும் விரைவில் அமைக்கப்படும் என தெரிகிறது.

தேமுதிகவும், பேஸ்புக் பக்கத்தை விரைவில் தொடங்க திட்டமிட்டிருக்கிறது. காங்கிரஸ் நிர்வாகியான அமெரிக்கை நாராயணன், இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் கட்சி வளர்ச்சிப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். எனவே, 2016 சட்டப்பேரவை தேர்தலில் தகவல் தொழில்நுட்ப பிரச்சாரம் முக்கிய பங்கு வகிக்கும் என்பது உறுதி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in