

கோவை: மத்திய அரசு நவோதயா பள்ளிகள் மூலம் தரமான கல்வி வழங்குவதை தமிழக அரசு தடுக்கிறது என, பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நூலகங்களின் எண்ணிக்கையை விட ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் எண்ணிக்கை அதிகம் என்ற நிலை இருந்தாலும், கல்வியில் சிறந்து விளங்குவது தமிழ்நாடு என்று மார்தட்டிக் கொள்வதில் மட்டும் திமுகவுக்கு எந்த குறைச்சலும் இருக்காது.
கல்விதான் ஒரு மனிதனை உயர்த்தும் என்றார் அண்ணல் அம்பேத்கர். உள்துறை அமைச்சர், அம்பேத்கரை பற்றி கூறியதை திரித்துக் கூறுவதில் காட்டும் ஆர்வத்தை, அம்பேத்கர் கூறிய கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதில் காட்டி இருக்கலாம்.
சொத்து வரியை உயர்த்திய பிறகும், பேருந்து கட்டணத்தை உயர்த்திய பிறகும், பால் விலையை உயர்த்திய பிறகும், ஒன்றரை கோடி ரூபாயை செலுத்த முடியாமல் குழந்தைகளின் கல்வியை கேள்விக்குறியாக்கும் திமுக அரசு தரமான கல்வியை கொடுக்க மறுக்கிறது.
மத்திய அரசு நவோதயா பள்ளிகள் மூலம் கொடுக்க நினைக்கும் தரம் வாய்ந்த கல்வியையும் தமிழக குழந்தைகளுக்கு சென்றடைவதை தமிழக அரசு தடுக்கிறது. இதற்கு அமைச்சர் பதில் கூறுவாரா அல்லது புதிதாக கதை ஏதேனும் சொல்வாரா. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.