

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலையை பறைசாற்றும் வகையில் அர்ஜூனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில், கிருஷ்ண மண்டபம் மற்றும் பஞ்ச பாண்டவர்கள் மண்டபம் எனப்படும் முழுமை பெறாத வடக்கு கிருஷ்ண மண்டபம் உட்பட பல்வேறு சிற்பங்கள் அமைந்துள்ளன. பாரம்பரியமான இச்சிற்பங்களை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. இவற்றை இந்திய தொல்லியல்துறையினர் பாதுகாத்து பராமரித்து வருகின்றனர்.
இவற்றில், கடற்கரை பகுதியில் உள்ள குடவரை கோயில், ஐந்துரதம் சிற்பங்கள் ஆகியவை, உப்பு காற்றில் சேதமடையாமல் இருக்க, அவ்வப்போது ரசாயன பூச்சுகள் பூசப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒரே பாறையில் வடிவமைக்கப்பட்ட பாண்டவர் மண்டபத்தில் உள்ள குடவரை சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரக் கூடியவை. அச்சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ள விதம் மற்றும் சிற்பத்தின் நுட்பமான வேலைப்பாடுகள், காண்போரை வியக்கவைக்க கூடியவை.
இந்நிலையில், மேற்கண்ட மண்டபத்தின் மேல்பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசல் பகுதியில் மழைநீர் கசிகிறது. இதனால், சிற்ப மண்டபத்தின் முகப்பில் அமைந்துள்ள அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் சிதிலமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக தொல்லியல்துறை சார்பில் விரிசல் பகுதியில் உள்ள தண்ணீர் கசிவை தடுப்பதற்காகவும் விரிசலை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதல்கட்டமாக தொல்லியல்துறை அதிகாரிகள் விரிசலை ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். தற்போது, கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாண்டவர் மண்டபம் அமைந்துள்ள பாறையின் மேல் பகுதியில் மழைநீர் வழிவதை தடுக்கும் வகையில், மாற்று இடத்தில் மழைநீரை வெளியேற்ற திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் இப்பணிகள் அனைத்தும் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி முறையில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தொல்லியல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து, மாமல்லபுரம் தொல்லியல்துறை அதிகாரிகள் கூறியதாவது: முழுமை பெறாத வடக்கு கிருஷ்ண மண்டபத்தை உள்ளூர் மக்கள் பஞ்ச பாண்டவர்கள் மண்டபம் எனக் கூறுகின்றனர்.
மிகவும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களில் உள்ள சிங்க வடிவிலான சிற்பங்கள் மண்டபத்துக்கு மிகவும் அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இந்நிலையில், தற்போது தூண்கள் அமைந்துள்ள பகுதியில் பாறையில் ஏற்பட்டுள்ள விரிசல் வழியாக மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
அதனால், துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனையுடன் விரிசல் பகுதியில் தண்ணீர் கசிவை தடுக்கவும் விரிசலை சீரமைக்கவும், பணிகள் ஆய்வு முறையில் மேற்கொள்ளப்பட்டன. இதனால், மண்டபத்துக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது. எனினும், மண்டபம் அமைந்துள்ள பாறையின் மீது மழைக்காலங்களில் வரும் மழைநீரை, மண்டப பகுதியில் வெளியேறுவதை தடுத்து மாற்று இடத்தில் மழைநீர் வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். மேற்கண்ட மண்டபத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளும் ஆய்வு முறையிலேயே மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது: விரிசல் அதிகரித்தால், குறிப்பிட்ட மண்டபத்தின் முகப்பு பகுதியில் உள்ள 5 தூண்களும் பாறையிலிருந்து பிரிந்து விழும் அபாயம் உள்ளது. எனினும், தேவையான முன்னேற்பாடுகளை தொல்லியல்துறை மேற்கொண்டு வருவது, இச்சிற்ப பகுதியில் பார்க்கும்போது தெரிகிறது. இந்த மண்டபத்தில் எந்தவித சேதமும் ஏற்படாத வகையில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.