இணையவழியில் டிச.26-ம் தேதி வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு கலந்தாய்வு

இணையவழியில் டிச.26-ம் தேதி வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு கலந்தாய்வு
Updated on
1 min read

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு டிசம்பர் 26-ம் தேதி எமிஸ் தளம் மூலம் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வட்டாரக் கல்வி அலுவலர் பணியில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பாண்டு வட்டாரக்கல்வி அலுவலர் காலிப் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவானது. இதற்காக பதவி உயர்வுக்கு தகுதியான 329 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் முன்னுரிமை அடிப்படையில் 170 பேர் கடந்த ஜூன் 14-ம் தேதி கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி காலியாக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர் பணி இடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான பதவி உயர்வு கலந்தாய்வு டிசம்பர் 26-ம் தேதி காலை 10 மணிக்கு எமிஸ் தளம் மூலம் இணையவழியில் நடத்தப்படவுள்ளது. இதற்கு முன்னுரிமை தகுதிப் பட்டியலில் 171 முதல் 329 வரை இடம் பெற்றுள்ள நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். மேலும், இந்த கலந்தாய்வை நடத்த தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு தயார் நிலையில் இருக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in