துணைவேந்தர் நியமனங்களில் தமிழக அரசு - ஆளுநர் இடையேயான மோதல் தேவையற்றது: அன்புமணி

துணைவேந்தர் நியமனங்களில் தமிழக அரசு - ஆளுநர் இடையேயான மோதல் தேவையற்றது: அன்புமணி
Updated on
1 min read

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் தமிழக அரசு, ஆளுநர் இடையேயான மோதல் தேவையற்றது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதில் தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் அவற்றின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக தமிழக அரசின் சார்பில் தேடுதல் குழுவை அமைத்து பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றும், அதனால் அந்த ஆணையை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். ஏற்கனவே 6 பல்கலை.களின் துணைவேந்தர்கள் பதவி காலியாக உள்ள நிலையில் இந்த மோதல் தேவையற்றதாகும்.

பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) பிரதிநிதியை சேர்க்க வேண்டுமா? வேண்டாமா? என்பது தான் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதலின் மையப்புள்ளி. யுஜிசி பிரதிநிதி கட்டாயம் என்பது ஆளுநரின் நிலைப்பாடு. ஆனால் பல்கலைக்கழக விதிகளில் அதற்கு இடமில்லை என்பது தமிழக அரசின் நிலைப்பாடு. பல்கலைக்கழகத்தின் விதிகள் மதிப்பட வேண்டும். அதன்படி இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலை தான் சரியானதாகும்.

அதுமட்டுமின்றி, வேந்தர் என்ற முறையில் தேடல் குழுவால் பரிந்துரைக்கப்படும் 3 பேர் கொண்ட பட்டியலில் இருந்து ஒருவரை துணைவேந்தராக தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மட்டும் தான் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, தேடல் குழுவை அமைப்பதற்கான அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. எனவே துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடர்ப்பட்ட வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தி இந்த சிக்கலுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in