

தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்க வேண்டும் என, தூத்துக்குடியில் இன்று (டிச.19) நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
முழுமையான இழப்பீடு: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் டிசம்பர் 2024 மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமை வகித்தார். மாவட்டம் முழுவதிலும் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
"மழை வெள்ளத்தால் மாவட்டத்தில் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பயிர்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தாமிரபரணி ஆற்றில் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளதால் தான் வெள்ளப்பெருக்கின் போது கரைகள் உடைந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. சீமைக்கருவேல மரங்களை அகற்ற எந்தவித நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்த ஏரல், ஆத்தூர் பாலங்கள் இதுவரை சீரமைக்கப்படவில்லை. அவைகளை விரைவாக சீரமைக்க வேண்டும்.
காட்டுப்பன்றிகள்: விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம், கோவில்பட்டி பகுதிகளில் காட்டுப்பன்றிகளால் பயிர்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டு வருகிறது. காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கே செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, காட்டுப்பன்றிகளை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். மேலும், காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். 2023- 2024-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு திட்ட இழப்பீடு வழங்கியதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு இலவசமாக பரிசோதனை விதைகளை வழங்க பணம் கேட்கும் கழுகுமலை வேளாண் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாழை இலை: விவசாயத்தை பாதுகாக்க குஜராத் மாநிலத்தை போல நவீன தொழில்நுட்பங்களை தமிழகத்திலும் புகுத்த வேண்டும். உணவகங்களில் பிளாஸ்டிக் இலை மற்றும் பிளாஸ்டிக் பேப்பரில் உணவு பரிமாறப்படுவதை தடை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக வாழை இலை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும். இதனால் வாழை விவசாயிகள் பயன்பெறுவார்கள். வறட்சியான உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகள் பயன்பெறும் வகையில் கன்னடியன் அணைக்கட்டில் இருந்து கருமேணி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.
உரிய இழப்பீடு: இவைகளுக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்தனர். "மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. கணக்கெடுப்பு விபரங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரபரணி ஆற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தாமிரபரணியில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
மறைவிடங்கள் அழிப்பு: காட்டுப்பன்றிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் காட்டுப்பன்றிகளின் மறைவிடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் உள்ள சீரமைக்கருவேல மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த பணி முழுமையாக முடிக்கப்பட்டு, காட்டுப்பன்றிகள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். மேலும், காட்டுப்பன்றிகளால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்து உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் அரசு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். விவசாயிகளுக்கு பொறுப்பற்ற முறையில் பதிலளிக்கக் கூடாது. கழுகுமலை வேளாண் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஹோட்டல்களில் பிளாஸ்டிக் இலை பயன்படுத்துவதை தடுக்கவும், வாழை இலை பயன்பாட்டை ஊக்கப்படுத்தவும் உணவு பாதுகாப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்" என ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா, வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம், பொதுப்பணித்துறை கீழ் தாமிரபரணி, கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேஷ், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.