

குரூப் 1 தேர்வு மூலம் டிஎஸ்பியாக பதவியில் சேர்ந்த 26 போலீஸ் அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையில் 3 கட்டங்களாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 2ம் நிலை காவலர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமும், உதவி ஆணையர்கள் (டிஎஸ்பி) தமிழக அரசால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வு மூலமும், அடுத்த கட்டமாக மத்திய அரசு (யூபிஎஸ்சி தேர்வு) மூலம் ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இவர்களில் குரூப் 1 தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் போலீஸாருக்கு பணி காலத்தின் அடிப்படையில் ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்படும். ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக இந்த அந்தஸ்து வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, இது தொடர்பாக நேற்று முன்தினம் டிஜிபி சங்கர் ஜிவால் டெல்லி சென்று உள்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்தார்.
இதையடுத்து, 2001 (2 பேர்), 2002 (9 பேர்), 2003 (14 பேர்), 2005 (ஒருவர்) என தமிழகத்தைச் சேர்ந்த குரூப் 1 அதிகாரிகள் 26 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதனால், இப்பிரிவு போலீஸார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.