

மதுரை: ‘‘கருணாநிதி பெயரில் உள்ள ஜல்லிகட்டு மைதானத்திற்கு கூட கரன்ட் பில்லை கட்ட முடியாத திமுக அரசு எப்படி மக்களை காப்பாற்றும்’’ என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார்.
அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களை வாக்காளர்களிடத்தில் கொண்டு செல்வது, ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 9 பேர் கொண்ட புதிய கிளை அமைப்பது குறித்து மதுரை புறநகர் மாவட்டம், மதுரை மேற்குத் (தெற்கு) ஒன்றிய சார்பில் ஆலோசனைக் கூட்டம் சமயநல்லூரில் புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றிய கழக செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் இ.மகேந்திரன், தேனி வி.டி. நாராயணசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே மாணிக்கம், நீதிபதி, தவசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சட்டசபை எதிர்கட்சித்தலைவரும், மாவட்டச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது: “ஜனவரி மாதம் 234 தொகுதிகளும், இபிஎஸ் சுற்றுப் பயணம் செய்ய உள்ளார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு வருகை தரும்பொழுது எல்லோரும் திரும்பிப் பார்க்கும் வகையில் அவருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும். தை பிறந்தால் வழிப் பிறக்கும் என்பதைப் போல, தமிழகத்தின் முதலமைச்சராக பழனிசாமி வருவார். அப்போது திமுக ஆட்சியில் இன்னல்களை அனுபவித்து வரும் மக்களுக்கு வழி பிறக்கும்.
அலங்காநல்லூர் பகுதியில் புதிதாக ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைத்து, அதற்கு கருணாநிதி பெயரை சூட்டினார்கள். ஆனால் அந்த மைதானத்தால் எந்த பயனும் இல்லை, அந்த ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கூட 8.66 லட்சம் மின் கட்டணம் பாக்கி உள்ளது. கருணாநிதி பெயரில் உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் கரண்ட் பில் கட்ட கூட யோக்கியதை இல்லாத அரசாக இருக்கும் திமுக அரசு எப்படி மக்களை காப்பாற்றும்’’ இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் பேசினார்.