

குன்னூர்: குன்னூரின் மையப் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்தை மாற்றினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என நீலகிரி மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்டில் உள்ள 800 கடைகளை இடித்துவிட்டு புதிதாக கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ரூ.41.50 கோடியில் பார்க்கிங் வசதியுடன் புதிய கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குன்னூர் மையப் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்தை பாரதியார் மண்டபம் பகுதிக்கு மாற்ற நகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ஆனால், அந்த பகுதிகளில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் இருப்பதாகவும், அதிகம் பள்ளிகள் இருப்பதால் வாகனங்கள் எளிதில் சென்று வர முடியாத நிலை உள்ளதால் இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், தீயணைப்பு நிலையம் உள்ள சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவு தீயணைப்புத் துறையினருக்கு சொந்தமான இடம் என்றும், இதனை நகராட்சி ஒருபுறம் தங்களுக்கு என்று உரிமை கொண்டாடி கடைகளை அமைக்க தீவிரம் காட்டி வரும் நிலையில், இன்று நீலகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தற்போது இந்த பகுதியில் இருந்து தீயணைப்புத்துறையை நகராட்சி கூறும் இடத்துக்கு மாற்றினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். தீயணைப்புத்துறையை பிருந்தாவன் அருகே மாற்றப்பட்டால் தற்போதுள்ள இந்த பகுதியில் தீயணைப்பு துறையினருக்கான குடியிருப்புகள் அமைக்க பரிந்துரைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.