பெட்ரோல் குண்டு வீசும் கலாச்சாரத்தை தமிழக அரசு ஒடுக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
Updated on
1 min read

சென்னை: திருநெல்வேலி அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தலைவிரித்தாடும் பெட்ரோல் குண்டு கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசு ஒடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மைதீன் என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அவ்வழியாக வந்த மற்றொரு நபர் ஒருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் சாதாரண குடியிருப்புகள் தொடங்கி கோயில்கள், காவல் நிலையங்கள், திரையரங்குகள், அரசியல் கட்சி அலுவலகங்கள், ஆளுநர் மாளிகை என பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெறாத இடங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது.

தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களின் வரிசையில் தற்போது இணைந்திருக்கும் பெட்ரோல் குண்டு கலாச்சாரம் சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்திருப்பதோடு, பொதுமக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

திருநெல்வேலியில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய நபர்களை கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்குவதோடு, வரும் காலங்களில் எந்தவித அச்ச உணர்வுமின்றி பொதுமக்கள் பாதுகாப்பான சூழலில் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in