

மதுரை: காமராஜர் பல்கலைக்கழகத்தில் முக்கிய பகுதிகளுக்கு நிரந்தரமாக ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகுதியான பேராசிரியர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் இன்றி, நிர்வாகத்தை கவனிக்க, உயர்கல்வி ஆணையர் சுந்தரவல்லி தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட ‘கன்வீனர்’ குழு நியமிக்கப்பட்டது. தற்போது, இக்குழுவில் இடம் பெற்றிருந்த 3 பேரில் ஒருவர் நீக்கப்பட்ட நிலையில், மற்றொருவருக்கு பதவி காலம் முடிந்தது. குழுத் தலைவர், ஒரு உறுப்பினர் மட்டுமே பணியில் உள்ளனர்.
இதற்கிடையில், பல்கலை நிர்வாகத்திற்கு உதவும் வகையில் பதிவாளர், தேர்வாணையர், டீன், தொலைநிலைக் கல்விக்கான இயக்குநர், கூடுதல் தேர்வாணையர் (தேர்வுகள் துறை) உள்ளிட்ட பதவியை கூடுதலாக கவனிக்கும் வகையில் தற்காலிகமாக மூத்த பேராசிரியர்கள் பொறுப்பில் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இப்பதவிகளுக்கு நிரந்தரமாக ஆட்களை நியமிக்கும் விதமாக உயர்கல்வித்துறை மூலம் பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு டிச.,7-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பதிவாளர், தேர்வாணையர், கூடுதல் தேர்வாணையர், தொலைநிலைக்கல்வி இயக்குநர் ஆகிய பதவிகளுக்கு தகுதியுள்ள பேராசிரியர்கள் டிச. 30-ம் தேதிக்குள் பல்கலை பதிவாளர் அலுவலகத்தில் கிடைக்குமாறு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களை அறிய பல்கலை இணையதளத்தில் (https://mkuniversity.ac.in) தெரிந்து கொள்ளலாம் என, பல்கலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் பல்கலை தேர்வுத்துறை, பிற நிர்வாக பணிகளுக்கான முடிவுகளை விரைந்து எடுக்க முடியும் என, பேராசிரியர்கள், அலுவலர்கள் நம்புகின்றனர்.
இது தொடர்பாக பேராசிரியர்கள் கூறுகையில், “பொதுவாக பல்கலை நிர்வாகம் தொடர்பான பதிவாளர், தேர்வாணையர்கள் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு தற்காலிகமாக பொறுப்பு பேராசிரியர்கள் நியமிக்கப்படுவது வழக்கம் என்றாலும், அவர்களிடம் மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பதில் ஒருவித தயக்கம் இருக்கும். மேலும், அவர்களுக்கு எதிரான அதிருப்தி ஏற்பட்ட நிலையில், அப்பதவிகளுக்கு நிரந்தர ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்மூலம் பல்கலை நிர்வாகம் தொடர்பான துரித நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக அமையும்” என்றனர்.