அண்ணாநகர் டவர் பூங்காவில் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தையின் தலை: பத்திரமாக மீட்ட பெற்றோர்
சென்னை: அண்ணா நகர் டவர் பூங்காவின் கம்பிகளுக்கு இடையே சிக்கிய சிறுமியின் தலையை பெற்றோரே பத்திரமாக மீட்டனர். அண்ணா நகரில் உள்ள டவர் பூங்காவின் மையத்தில் 135 அடி உயரத்தில், சுமார் 12 அடுக்குகள் கொண்ட கோபுரம் உள்ளது.
இந்த கோபுரத்தில் இருந்தவாறு நகரின் அழகை ரசிக்கலாம். இதற்காக அடுக்குகள் தோறும் கம்பிகள் போடப்பட்டுள்ளது. அதன் வழியாக கண்டு களிக்கலாம். தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில், இந்த கோபுரத்தில் நின்றவாறு சிறுமி ஒருவர் இயற்கையை ரசித்துள்ளார். ஆர்வத்தில் கோபுர இரும்பு கம்பிகளுக்கு இடையே தலையை விட்டுள்ளார். பின்னர், அதை எடுக்க முடியாமல் அழ ஆரம்பித்துள்ளார். இதைக் கண்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் கம்பிகளுக்கு இடையே மாட்டிக் கொண்ட சிறுமியின் தலையை லாவகமாக மீட்டனர். அதன் பிறகே அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த வீடியோ காட்சி நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் எப்போது நடைபெற்றது என உடனடியாக தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடைபெறுவதாக போலீஸார் தெரிவித்தனர்.
