

தஞ்சாவூர்: கனமழையால் சுவர்கள் ஊறியிருந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 238 குடிசை வீடுகள், 107 ஓட்டு வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மழை இல்லாத நிலையில், மழையால் சுவர் ஊறியிருந்த குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய வட்டாரங்களில் 238 குடிசை வீடுகள், 107 ஓட்டு வீடுகள் என மொத்தம் 345 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. மேலும், மாவட்டம் முழுவதும் 14 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
இது தொடர்பாக வருவாய்த் துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். வீடுகளையும், கால்நடைகளையும் இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.