‘கணினிகளை உடைப்போம்’ - தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: கனிமவளத்துறையில் இரண்டு வாரங்களுக்குள் கணினி முறையை நடைமுறைப்படுத்தவில்லை எனில், கனிமவளத்துறை அலுவலகங்களில் கணினிகளை உடைக்கும் நூதன போராட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என்று தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கனிமவளத்துறையில் நடக்கும் நடைமுறை சிக்கல்களையும் முறைகேடுகளையும் அரசுக்கு ஏற்பட்டும் வருவாய் இழப்புகளையும் களைய வேண்டுமென்றால், ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் மின்னணு வழி கட்டண ரசீது முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் பலமுறை வலியுறுத்தியும் இந்நாள் வரையில் இந்த திட்டத்தை கனிமவளத்துறை நடைமுறைப்படுத்தவில்லை.

அனைத்து மலை மற்றும் கல்குவாரிகளில் 100 ரசீது பெற்றுக்கொண்டு அரசுக்கு தெரியாமல் 1,000 லோடு மலையை வெட்டி எடுக்கப்படுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் அனைத்து மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் முறைகேடுகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மீண்டும் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க மின்னணு வழி கட்டண ரசீது கொண்டு கனிமங்களை எடுக்க வேண்டும்.

கனிம கொள்ளையையும், கடத்தலையும் தடுத்து நிறுத்த வேண்டும். மின்னணு வழி கட்டண ரசீது நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பதுடன் அரசுக்கு ஏற்படும் இழப்பையும் தடுத்து நிறுத்த முடியும் என்பதே எங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. கனிமவளத்துறையில் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு ஆன்லைன் முறையையும் மற்றும் மின்னணு வழி கட்டண ரசீது நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் நிறைவேற்றாமல் அரசு சுணக்கம் காட்டி வருகிறது.

இன்னும் இரண்டு வாரங்களுக்குள் கனிமவளத்துறையில் கணினி முறையை நடைமுறைப்படுத்தி கனிமவளத்துறை ஆணையரும் முன்வரவில்லை என்றால், மற்ற எந்த கனிமவளத்துறை அலுவலங்களில் கணினி வேண்டாம் என்று கணினிகளை உடைக்கும் நூதன போராட்டம் வரும் 23-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in