‘உ.பி.யை அரசியல் பரிசோதனை கூடமாக இயக்குகிறது பாஜக’ - கி.வீரமணி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

கும்பகோணம்: உத்தரப் பிரதேச மாநிலத்தை பாஜகவினர் அரசியல் பரிசோதனை கூடமாக இயக்கி வருகிறார்கள் என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறியது: கேரளா மாநிலம் வைக்கத்தில், தமிழக - கேரளா முதல்வர்கள் பெரியாருக்கு வரலாற்றில் காணமுடியாத அற்புதமான நூலகம், காட்சியகம், கண்காட்சி உள்ளிட்டவைகளை அமைத்துள்ளனர். அதன் வெற்றி என்பது ஒரு பகுதி தான். மற்றொரு வெற்றி காவியையும், தீண்டாமையையும் வேரோடும், வேரடி மண்ணோடும் அழிப்பது தான்.

வரும் டிச.24-ம் தேதி பெரியார் நினைவு தினத்தன்று ஒரு வாரத்திற்குத் தமிழகம் முழுவதும் தோழமை கட்சிகளை அழைத்து, சாதி, தீண்டாமை ஒழிப்பு வலியுறுத்தும் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதில் ஒத்த கருத்துள்ளவர்கள் அனைவரும் ஓரணியிலேயே இணைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். எந்த அரசும் செய்யாத சாதனைகளை திராவிட மாடல் அரசு செய்திருக்கின்றது என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல, திராவிட கழகம் முன் நிற்கும். தேவைப்பட்டால் போராட்டக்களமாக மாறும்.

பாஜக அரசியல் சட்டக் காவலர்கள் என்று சொல்லிக் கொண்டு, அதன் முகப்புரையை அழிக்கிறார்கள் என்பதற்கு அடையாளம் தான் ஒரே நாடு ஒரே தேர்தலாகும். அனைத்திலும் ஒன்று தான் என்று கூறும் பாஜக அரசு, அனைவரும் ஒரே சாதி என்று சொல்வதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறது. முதலில் மக்களை ஒருநிலைப்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பில், அடிக்கட்டுமானத்தை எந்த சட்டத்திட்டமும் மாற்ற முடியாது என மிகத்தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இறையாண்மை என்பது மக்கள் மத்தியில் தான் உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் கொண்டு வந்தால் பொருளாதாரம் மிச்சப்படும் என்று கூறுகிறார்கள். இந்த சட்டம் இயற்றினால் இனிமேல் தேர்தலே வராது. இது பாசிசத்துடைய முகபுலாம் அணிந்த ஒன்று. இந்த சட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமானது, சர்வாதிகாரமாகும்.

பாஜக அரசு முழு மெஜாரிட்டி அரசு இல்லை, மைனாரிட்டி கூட்டணி அரசு தான். 2 கட்சி தயவினால் இந்த ஆட்சி நடைபெறுகிறது. மனு தர்ம ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்காக தான், இந்த திட்டத்தைச் செயல்படுத்த உள்ளார்கள். இது வன்மையாக கண்டிக்கக்கூடியதாகும்.

கருணாநிதி நெஞ்சுக்கு நீதியில் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி எழுதியது, அந்த நேரத்திற்கு அவருக்குத் தேவைப்பட்ட கருத்தைக் கேட்டிருப்பார்கள், அதைப் பற்றிக் கூறியிருப்பார். இதில் அவர் கூறியது முரண்பாடு இல்லை.

உத்திரபிரதேசம் மாநிலத்தை பாஜக அரசியல் பரிசோதனை கூடமாக இயக்கி வருகிறார்கள். அங்கு மனுதர்மப்படி ஆட்சி நடைபெறுகிறது. இப்போது அவர்களது பலமே, எதிர்க்கட்சியின் பலவீனம் தான். வென்றாலும், தோற்றாலும் நாங்கள் தான் ஆட்சி என்ற புதிய தத்துவத்தைச் செய்திருக்கிறது பாஜக அரசு. இவ்வாறு வீரமணி தெரிவித்தார்.

நடிகர் விஜய் கட்சி தொடங்கியது குறித்துக் கேட்ட போது, "வானவில் அடிக்கடி தோன்றும், சூரியன் எப்போதும் நிரந்தரமாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in