“கோவை மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் சரியாக அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு”: வானதி சீனிவாசன்

“கோவை மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் சரியாக அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு”: வானதி சீனிவாசன்
Updated on
1 min read

கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் சரியாக அகற்றப்படாததால் மிகப்பெரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய மகளிரணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் நடத்தும் கோவை மக்கள் சேவை மையம் சார்பில், தனியார் மருத்துவமனையுடன் இணைந்து கோவை மாநகராட்சி 70-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் இன்று நடந்தது.

முகாமை பார்வைியட்டு பங்கேற்ற மக்களிடம் வானதி சீனிவாசன் கலந்துரையாடினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மழை காலத்தில் உடல் நலம் தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் முகாமில் பங்கேற்ற மக்களுக்கு வழங்கப்படுகிறது. கோவை மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் சரியாக அகற்றப்படாததால் மிகப்பெரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதிக வருவாய் கொடுக்கும் கோவை மாநகராட்சியில் மக்கள் தரமான வாழ்வதற்கு கட்டமைப்பை மாநில அரசு ஏற்படுத்தி தராதது கண்டனத்துக்குரியது.

சட்டப்பேரவை கூட்டத் தொடர் இரு நாட்கள் நடத்தியது பெயருக்கு நடத்தி முடிக்க வேண்டும் என்பதால்தான் செயல்பட்டு உள்ளதாக தோன்றுகிறது.ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு ஆண்டுக்கு 100 நாட்கள் சபை நடத்துவோம் என கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டது.

டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு, ஏதாவது பிரச்சினை என மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்பதாகும். மத்திய அரசுக்கு எதிராக அரசியல் செய்வதன் வாயிலாக தங்களை நிலை நிறுத்தி கொள்ள முடியும் என்பது மட்டும் தான் திமுக-வின் நிலைபாடு.

பல்வேறு துறைகளில் தமிழக அரசு தோல்வியை சந்தித்து வருகிறது. மாநில அரசின் பல்வேறு குறைபாடுகளுடன் மழை பாதிப்புகளும் சேர்ந்துள்ளது.மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை திமுக-வினர் பொருட்படுத்தாமல் உள்ளனர். இதற்கான பலனை 2026-ம் ஆண்டு தேர்தலில் அனுபவிப்பார்கள்.

கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டுவர நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்வதன் வாயிலாக தான் இதை கொண்டு வர முடியும். பொது கருத்தை எட்டுவதற்கு மாநில கட்சிகள் கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளலாம். மாநில அரசு பொறுப்பில் உள்ள பள்ளி கல்வித் துறையை சரியாக அணுக முடிவதில்லை. அதனால் ஆரோக்கியமாக இதுதொடர்பாக தீவிர விவாதம் நடத்தப்பட வேண்டும்.

ஊடகத்தில் அமைச்சர்களின் பதில்கள், நடைமுறையில் என்ன என்பதை சமூக வலைதளங்களில் இளைஞர்கள் பதிவிடுகின்றனர். ஒரு மகாராஜா மனப்பான்மையில் தான் அமைச்சர்கள் உள்ளனர்.அதானி தொடர்பாக பாஜக மாநில தலைவர் முன் வைத்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில் கூற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in